சினிமா செய்திகள்
null

பிரபல மலையாள பட இயக்குனர் 'திடீர்' மரணம்

Published On 2024-07-02 08:24 GMT   |   Update On 2024-07-02 10:19 GMT
  • பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (வயது53).
  • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (வயது53). கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

1971-ம் ஆண்டு பிறந்த இவர், பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களான ஜெஸ்சி மற்றும் பிஜி விஸ்வம்பரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதன் மூலம் மலையாள திரையுலகில் கால்பதித்தார். அதன்பிறகு பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் கலாபவன் மணி, முகேஷ் மற்றும் ரம்பா நடித்த 'கபடி கபடி' திரைப்படத்தை இயக்கி சுதீர் போஸ் இயக்குனரானார். இந்த படத்தில் நாதிர்ஷா இசையமைப்பில் நடிகர் கலாபவன் மணி பாடிய 'மின்னாமினுங்கே' என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது. இதன் மூலம் சுதீர் போஸ் இயக்கிய 'கபடி கபடி' படம் கொண்டாடப்பட்டது.

இவருக்கு ப்ரீதா என்ற மனைவியும், மிதுன் என்ற மகனும், சவுபர்ணிகா என்ற மகளும் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவனந்தபுரம் பதிஞ்சரேனடா பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் தான் உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு மலையாள திரையுலக நடிகர்-நடிகைகள், திரைப்பட இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுதீர் போசின் இறுதிச்சடங்கு வருகிற 5-ந்தேதி நடை பெறும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

Tags:    

Similar News