விஜய் சேதுபதி இல்லை என்றால் ... - மணிகண்டன் நெகிழ்ச்சி
- இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'குடும்பஸ்தன்'.
- இத்திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'குடும்பஸ்தன்'. தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இது நகைச்சுவையான பொழுதுபோக்கு கொண்ட குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டுள்ளது. மணிகண்டன் கதாநாயகனாக நடித்த 3 திரைப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குருசோமசுந்தரம் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு வைசாக் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை ஜீ5 தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் மணிகண்டன் கலந்துக்கொண்ட நேர்காணலில் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது " நான் முதன் முதலில் விஜய் சேதுபதி அண்ணனை காதலும் கடந்து போகும் திரைப்பட படப்பிடிப்பில் தான் சந்தித்தேன். ஒரு நாள் நான் இதற்கு முன் பணியாற்றிய இடங்கள், சேனல்கள் என என்னைப்பற்றி கூறினேன். பிறகு அப்படியே எங்களுக்குள் ஒரு நட்பு ஏற்பட்டது. என் தங்கச்சிக்கு ஒரு சின்ன அறுவை சிகிச்சை நடந்தது . அதற்கு வந்து என்னை விஜய் சேதுபதி அண்ணன் நேரில் வந்து பார்த்தார். என் தங்கை கல்யாணத்திற்கு அவரை நான் முறைப்படி பத்திரிக்கை வைத்து அழைக்கவே இல்லை. ஆனால் என் தங்கைக்கு திருமணம் என அவருக்கு தெரியும். திருமண நாள் அன்று எனக்கு கால் செய்து மண்டபத்தில் ஒரு 20 நிமிடம் காத்து இருக்கச் சொன்னார். பின் 20 நிமிடங்களில் மண்டபத்திற்கு வந்தார். என்னுடைய அம்மா, அப்பாவிடம் பேசிவிட்டு கவலைப்படாதீங்க உங்க பையன் நல்லா வருவான்னு சொல்லிட்டு 3 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்தார். அவர் அந்த பணம் கொடுக்காமல் இருந்து இருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என தெரியாது. நான் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப் பட்டிருப்பேன்." என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.