ஏ.ஆர்.ரகுமானின் உடல்நிலை குறித்து சகோதரி அளித்த தகவல்
- லண்டனில் இருந்து நேற்று இரவுதான் மும்பை வழியாக சென்னை திரும்பினார்.
- தற்போது நோன்பு காலம் என்பதால் ஏ.ஆர்.ரகுமானும் நோன்பு கடைபிடித்து வருகிறார்.
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்தார். காலை 7.30 மணி அளவில் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார்.
உடனடியாக அவரை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவரை இதயவியல் துறை டாக்டர்கள் பரிசோதித்தார்கள்.
இதயத்தில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பதை கண்டறிய ஆஞ்சியோ பரிசோதனை நடத்த இருப்பதாகவும், அதன்பிறகே அடுத்த கட்ட சிகிச்சைகள் பற்றி தெரிய வரும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்பட பல்வேறு இந்திய மொழிகளிலும், உலக அளவிலும் இசை அமைத்து வருவதால் ஐதராபாத், மும்பை, லண்டன் என்று சுற்றிக்கொண்டிருப்பார்.
அந்த வகையில் லண்டனில் இருந்து நேற்று இரவுதான் மும்பை வழியாக சென்னை திரும்பினார். இன்று காலையில் தூங்கி எழுந்து அமர்ந்திருந்த போதுதான் திடீரென்று நெஞ்சுவலி வந்திருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானும் அவரது மனைவி சாய்ராபானுவும் 29 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வந்த திருமண வாழ்க்கையில் திடீர் மனமுறிவு ஏற்பட்டது. விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக சாய்ரா பானு அறிவித்தார்.
இப்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். சாய்ரா பானு மும்பையில் தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நோன்பு காலம் என்பதால் ஏ.ஆர்.ரகுமானும் நோன்பு கடைபிடித்து வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமானுடன் அவரது மகன் அமீன், மகள் இஸ்ரத், சகோதரி ரஹானா ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள்.
ஏ.ஆர்.ரகுமானின் மற்றொரு சகோதரியான பாத்திமா அவரது உடல் நலம் பற்றி கூறியதாவது:-
தொடர் பயணங்களால் பெரிய களைப்பில் இருந்தார். அதற்காக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைதான். தற்போது உடல்நிலை சீராக உள்ளது. பயப்படும்படி எதுவும் இல்லை.
இவ்வாறு பாத்திமா கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.