திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ரஜினிகாந்த் வாக்களித்தார்
- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு சென்னை அடையாறில் நடைபெற்று வருகிறது.
- இதில் தனது வாக்குகளை நடிகர் ரஜினிகாந்த் பதிவு செய்தார்.
தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு சங்கங்களில் முக்கியமானதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.
காலை முதல் தொடங்கிய தேர்தலில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அடையாறு மையத்துக்கு நேரில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். ராதிகா சரத்குமார், ஏ.ஆர்.முருகதாஸ், சசிகுமார் உள்ளிட்டோரும் வாக்களித்தனர். மேலும் நடிகர் கமல்ஹாசன் மதியம் வாக்களிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தேர்தல் மூலம் தலைவர், 2 துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.