null
குழந்தையின் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்.. 2-வது திருமணம் பற்றி நடிகை மேக்னா ராஜ்
- கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 7-ந் தேதி நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
- இவரது மனைவி நடிகை மேக்னா ராஜ் 2-வது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி பிரபல நடிகை மேக்னாராஜ். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 7-ந் தேதி நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அப்போது நடிகை மேக்னாராஜ் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். தற்போது அவருக்கு ராயன்ராஜ் சர்ஜா என்ற ஆண் குழந்தை உள்ளது. கணவர் உயிர் இழந்த சோகத்தில் இருந்து வந்த நடிகை மேக்னாராஜ், அதில் இருந்து மீண்டு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், 32 வயதான நடிகை மேக்னாராஜ் 2-வது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுபற்றி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை மேக்னா ராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது, மனது என்ன சொல்லும். எனது கணவர் இறந்த பின்பு, என்னுடைய குழந்தையை வளர்ப்பது, அவனது எதிர்காலம் பற்றி தான் சிந்தித்து வருகிறேன்.
ஒரு சிலர் 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி என்னிடம் கூறுகிறார்கள். சிலர் சிரஞ்சீவி சர்ஜாவின் நினைவில் வாழும்படியும் கூறுகிறார்கள். எனது கணவர் எப்போதும் ஒன்றை சொல்வார். யார் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள், அதனை கேட்க வேண்டும், ஆனால் இறுதியில் முடிவு எடுப்பது நாமாக தான் இருக்க வேண்டும் என்பார்.
தற்போது 2-வது திருமணம் செய்து கொள்வது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. வரும் நாட்களில் எனது மனது என்ன சொல்லும் என்பது தெரியவில்லை. எனது எதிர்கால வாழ்க்கை பற்றிய இறுதி முடிவு எடுக்கும் சக்தி எனக்கு உள்ளது. 2-வது திருமண விவகாரத்தில் நான் என்ன முடிவு எடுத்தாலும், சிரஞ்சீவி என்னுடன் எப்போதும் இருப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எல்லாவற்றையும் விட எனது குழந்தையின் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்தித்து வருகிறேன். எனது மகனுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்க வேண்டும். அதுவே எனக்கு இருக்கும் ஆசை ஆகும் என்று அவர் கூறினார்.