சினிமா செய்திகள்

இயக்குனராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன்- அந்தோணி தாசன் பேச்சு

Published On 2024-01-13 13:47 IST   |   Update On 2024-01-13 13:47:00 IST
  • ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.
  • இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

சோசியல் மீடியாவின் வளர்ச்சியால் இன்று பலரிடம் இருக்கும் திறமைகள் உலக அளவில் பிரபலமடைந்தாலும் அவர்களுக்கான சரியான வாய்ப்பு மட்டுமே எளிதாக கிடைப்பதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் குளோப் நெக்சஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்நிறுவனம் திறமைசாலிகளை தேடிக் கண்டுபிடிக்கும் விதமாக (Talent Hunt Show Launch) 'நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்' என்ற நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் திறமைசாலிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ள குளோப் நெக்சஸ் நிறுவனம், அவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிப்பதோடு, திரைப்பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து அங்கீகரிக்க உள்ளது.

'நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்' போட்டியில் பங்கேற்க, இதற்கான இணையதளத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்டும் விதமாக 30 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த வீடியோக்களில் சிறந்த திறமைசாலிகளை தேர்வு செய்ய திரை பிரபலங்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.


ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்குவதோடு, அவர் திறமைக்கு ஏற்ப திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்றுத்தரப்படும். அதேபோல் இரண்டாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.3 லட்சமும், மூன்றாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.2 லட்சமும், நான்காவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா ஜனவரி 12-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில், குளோப் நெக்சஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் மீனாட்சி அருண், நிகழ்ச்சி மேலாளர் பவித்ரா, பொது மேலாளர் தேவிபிரியா ஸ்டீபன், மேலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பிரபல பாடகரும், இசையமைப்பாளரும், தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருப்பவருமான அந்தோணி தாசன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.


இதில் அந்தோணி தாசன் பேசியதாவது, "சிறுவயதில் நான் கூட்டத்துடன் கூட்டமாக திரைப்படங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன், ஒரு ரசிகனாக கொண்டாடியிருக்கிறேன். இன்று நாட்டுப்புற கலையில் இருந்து வளர்ந்து, மக்களோட ஆசீர்வாதம், தெய்வத்தின் அருள், உங்களைப் போன்ற பெரியவர்களின் ஊக்கத்தால் இன்று ஒரு இயக்குனராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் பயணிக்கும் பாதை சரியானது என்று நான் கருதுகிறேன். கூத்து கலைஞராக மக்களை நேரடியாக மகிழ்வித்து இருக்கிறேன். ஒரு பாடகனாகவும், இசையமைப்பாளராகவும் மக்களை மகிழ்வித்திருக்கிறேன். இப்போது நான் எடுத்திருக்கும் இயக்குனர் அவதாரத்தையும் சிறப்பாக செய்வேன் என்று நான் வணங்கும் கடவுள் அருளால் நம்புகிறேன்.

குளோப் நெக்சஸின் 'நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்' நிகழ்ச்சி திறமைசாலிகளுக்கான மிகப்பெரிய வாய்ப்பு. விசில் சத்தம் மற்றும் கைதட்டல் தனக்கும் கிடைக்காதா என்று பலர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள், அப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தை போக்குகின்ற ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைய இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நான் இயக்கும் படத்தில் வாய்ப்பு வழங்குவது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் இயக்கும் படத்தின் தலைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் ஏப்ரல் 14 -ஆம் தேதி நடைபெறும் 'நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்' இறுதிப் போட்டியில் அறிவிக்கப்படும், நன்றி என்றார்.

Tags:    

Similar News