ரஜினியின் 'ஜெயிலர் ' படத்திற்கே இந்த நிலைமை- கே.ராஜன் பேச்சு
- ராகுல் ஆர்.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஐமா’.
- இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
'ஆருயிரே' குறும்படத்தை இயக்கிய இயக்குனர் ராகுல்.ஆர். கிருஷ்ணா. எழுதி, இயக்கியுள்ள படம் 'ஐமா'. தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக யூனஸ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக எல்வின் ஜூலியட் நடிக்கிறார்.
மேலும், அகில் பிரபாகரன், மேகாமாலு மனோகரன்,சிஷிரா, சாஜி தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கே.ஆர். ராகுல் இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ஐமா ' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குனர் பேரரசு, இயக்குனர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன் பேசியதாவது, சிறு முதலீட்டு படங்கள் தான் திரையுலகை என்றும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் தோராயமாக 320 படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 100 முதல் 150 படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழாக்கள் நடந்துள்ளன. ஆனால் சுமார் 70 படங்கள் தான் சிரமப்பட்டு வெளிவந்திருக்கின்றன. வெளியான பல படங்களின் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விட்டார்கள். மீதமுள்ள 250 லிருந்து 300 படங்கள் வெளிவராமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வகையில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இந்தப் படங்களில் முடங்கி உள்ளது.
நான் நிதி உதவி செய்த ஒரு படத்திற்கு 12 கோடி செலவானது. ஆனால் அதன் வெளி மொழி உரிமை போன்றவை ஆறு கோடிக்கு விற்பனையானது, இருந்தாலும் கூட அந்தப் படத்தை வெளியிட முடியவில்லை. இதுதான் இன்றைய நிலைமை. சிறு முதலீட்டுப் படங்கள் சிரமம் இன்றி வெளிவர வேண்டும். அப்படி வெளிவந்தால் அந்த தயாரிப்பாளர் மீண்டும் படம் தான் எடுப்பார். ஆனால் பெரிய படங்களின் மூலம் வரும் லாபம் மீண்டும் சினிமாக்கு வருமா என்றால்,தெரியாது. இன்று 'ஜெயிலர்' படம் வெற்றிகரமாக ஓடியுள்ளது. ரஜினிகாந்த் பெரிய நட்சத்திர நடிகர்தான் சந்தேகம் இல்லை. இருந்தாலும் அவருக்குக் கூட மலையாளத்திலிருந்து மோகன்லாலும் கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமாரும் வந்து நடிக்க வேண்டி உள்ளது. இப்படி இன்று சினிமா மாறி உள்ளது. இப்போதெல்லாம் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படம் எடுக்கிறார்கள். அவர்களை நான் வரவேற்கிறேன். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.