சினிமா செய்திகள்

மன்சூர் அலிகான் அவதூறு கருத்து.. திரிஷாவிடம் வாக்குமூலம் பெற தயாராகும் போலீசார்

Published On 2023-11-25 14:09 IST   |   Update On 2023-11-25 14:09:00 IST
  • 'திரிஷாவே என்னை மன்னித்து விடு' என்று அறிக்கை வெளியிட்டு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டார்.
  • மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஆஜரானார்.

நடிகை திரிஷா பற்றி அவதூறாக பேசிய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திரிஷா பற்றிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்திருந்த மன்சூர் அலிகான் பின்னர் 'திரிஷாவே என்னை மன்னித்து விடு' என்று அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டார்.

ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஆஜரானார். அப்போது மன்சூர் அலிகானிடம் 45 நிமிடங்கள் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது திரிஷா பற்றி தவறான கண்ணோட்டத்துடன் எதுவும் பேசவில்லை என்று மன்சூர் அலிகான் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் அளித்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.


இதற்கிடையே சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மன்சூர் அலிகான் போலீஸ் நிலையத்தின் பெயரை தவறுதலாக குறிப்பிட்டு தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார். இதற்கு நீதிபதி அல்லி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது. மன்சூர் அலிகானின் மன்னிப்பை திரிஷா ஏற்றுக் கொண்ட நிலையிலும் முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால் அவர் மீதான சட்ட நடவடிக்கைகளில் அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மன்சூர் அலிகான் கைது செய்யப்படுவாரா? என்கிற கேள்வியும் எழுந்தது. இவற்றை போலீசாரிடம் கேட்டபோது, முன்ஜாமீன் மனு தள்ளுபடியாகி இருக்கும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.


இந்த நிலையில் மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி அவதூறாக பேசியது தொடர்பாக திரிஷா இது வரை போலீசில் எந்த புகாரையும் அளிக்காமலேயே உள்ளார். இருப்பினும் மன்சூர் அலிகான் மீது போடப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக திரிஷாவிடம் நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

திரிஷாவை நேரில் அழைத்தோ அல்லது அவரது வீட்டுக்கு சென்றோ விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணை மற்றும் வாக்குமூலத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் கண்டிப்பாக அவரிடம் உரிய விசாரணையை நடத்த தயாராகி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News