உங்க அன்புக்கு கடமைப்பட்டிருக்கேன்.. வைரலாகும் சூர்யாவின் உருக்கமான பதிவு
- 'கங்குவா' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது.
- படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'கங்குவா' படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கும் போது, நடிகர் சூர்யா விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சூர்யாவின் தோள் பட்டையில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நசரத் பேட்டை போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விபத்துக்கு பிறகு நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அன்பார்ந்த நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் அன்பான ரசிகர்களுக்கு, சீக்கிரம் குணமடைய வாழ்த்தும் குறுந்தகவல்கள் அனைத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது சிறப்பாக உணர்கிறேன்.. உங்களின் அன்புக்கு எப்போதும் நான் கடமைப்பட்டுள்ளேன்," என்று தெரிவித்துள்ளார்.