மவுனமாக இருப்பது உண்மையை மறைத்து வைப்பதற்கு சமம்- அமீருக்கு சசிகுமார் ஆதரவு
- ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை.
- "பருத்திவீரன்” திரைப்படம் தொடர்பாக, எனக்கும் ஞானவேல்ராஜா அவர்களுக்கும் இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் போடப்படவில்லை.
இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ல் வெளியான திரைப்படம் "பருத்திவீரன்". இந்த படம் நடிகர் கார்த்திக்கு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. இதையடுத்து கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான "ஜப்பான்" படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தன்னை அழைக்கவில்லை என்று கூறிய அமீர், "பருத்திவீரன்" படத்தால் தனக்கு 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், சிவக்குமார் குடும்பத்தினருடன் நல்ல நட்பு இருந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதனை கெடுத்துவிட்டார் என்றும் கூறியிருந்தார்.
அமீரின் இந்த குற்றச்சாட்டு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, அமீர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தன்னை போலவே இன்னும் சில தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டதாகவும் பேட்டியளித்திருந்தார்.
இதையடுத்து, இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பருத்திவீரன்" தொடர்பான வழக்கு, இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரிலேயே நான் இன்னும் பதிலளிக்காமல் இருக்கிறேன். அதன் காரணமாகவே, ஊடக நண்பர்களைச் சந்திக்காமலும் இருக்கிறேன். இதில், வேறு எந்த காரணமும் கிடையாது. இருந்தாலும், தொடர்ச்சியாக இப்பிரச்சனை "YOUTUBE" உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால், சில விளக்கங்களை அளிக்க நான் விரும்புகிறேன்.
"பருத்திவீரன்" தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை. அனைத்தும், புனையப்பட்ட பொய்கள். இது முழுக்க முழுக்க சமூகத்தில் எனக்கு இருக்கும் கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கத்தோடும், திரைத்துறையில் என்னுடைய பயணத்தை தடைசெய்யும் நோக்கத்தோடும் திட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப்பிரசாரமே.
சசிகுமார் பதிவு
"பருத்திவீரன்" திரைப்படம் தொடர்பாக, எனக்கும் ஞானவேல்ராஜா அவர்களுக்கும் இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் போடப்படவில்லை. எனவே, இல்லாத ஒப்பந்தத்தை நான் மீறவும் இல்லை. படத்தின், முதல் கட்டப் படப்பிடிப்புக்கு அவர் வழங்கிய தொகையைத் தவிர அடுத்தடுத்த காலக்கட்டங்களில் படப்பிடிப்புக்கான தொகையைத் தராமல் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு காணமல் போனவர் அவர்.
அதன் பின்னரே, நான் எனது "TEAMWORK PRODUCTION HOUSE" நிறுவனத்தின் மூலம் அந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்தேன். மேலும், "பருத்திவீரன்" படப்பிடிப்புச் சூழல் முழுவதையும் முற்றாக அறிந்த, இன்றைக்கு திரைத்துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் என் சகோதரர்களும், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இப்பிரச்சனையில், அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது" என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இயக்குனர் சசிகுமார், அமீருக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அண்ணன் அமீர் இயக்குனர்கள் சங்கத்தின் பொறுப்பிலிருக்கும்போது பல்வேறு பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தவர். அவரது பிரச்சனைகளைத் தீர்க்கும் வல்லமையும் அவருக்கு உண்டு. இப்பொழுது அண்ணன் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாரியிறைத்த வன்மமான வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை இயக்குனர்கள் சங்கம் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். மவுனமாக இருப்பதென்பது உண்மையை மறைத்து வைப்பதற்குச் சமம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
#Ameer#TANTIS #இயக்குனர்கள்சங்கம் #RKSelvamani #RVUdhayakumar pic.twitter.com/74jPCXTUJS
— M.Sasikumar (@SasikumarDir) November 25, 2023