தனித்துவமான நடன அசைவில் ஷகிராவின் சிலை- அன்னார்ந்து பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்
- மிகவும் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் ஷகீரா.
- இவர் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
பாப் உலகில் பிரபல பாடகியாக இருந்து வருபவர் ஷகிரா (வயது 45). கொலம்பியன் பாடகரான இவர் பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். லாண்டரி சர்வீஸ் (Laundry Service) என்கிற ஆல்பத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஷகீரா.
2010-ஆம் ஆண்டு உலக கோப்பை கால் பந்து போட்டியில் இவர் பாடிய 'ஷமினா மினா ஓய்..ஓய்.. வக்கா..வக்கா' பாடல் உலகம் முழுவதும் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. கிராமி விருதுகள், இசை விருதுகள் என பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
ஷகிராவின் சிலை
இந்நிலையில், பாடகி ஷகீராவிற்கு அவரது சொந்த ஊரான கொலம்பியாவில் உள்ள பரன்குவிலரஸில் 21 அடி உயர சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கலைஞர் யினோ மார்க்ஸ் வடிவமைத்துள்ளார். இந்த சிலை கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான 'ஹிப்ஸ் டோண்ட் லை' (Hips don't lie) என்ற ஆல்பத்தில் ஷகிராவின் தனித்துவமான நடன அசைவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை ஷகீராவின் தந்தை, தாய் மற்றும் பரன்குவிலரஸ் மேயர் முன்னிலையில் திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை ஷகீரா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.