சிக்கலான கதையை எளிமையாக சொல்ல முயன்றுள்ளோம்- சுசீந்திரன்
- விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'வள்ளி மயில்'.
- இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என கவனிக்க வைத்த பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இதைத்தொடர்ந்து, இவர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'வள்ளி மயில்'. இப்படத்தில் பிரியா அப்துல்லா, சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தினை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் இயக்குனர் சுசீந்திரன் பேசியதாவது, நல்லுசாமி பிக்சர்ஸுடன் எனக்கு இது 4-வது படம். வள்ளி மயில் ஒரு கிரைம் த்ரில்லராக ஆரம்பித்த படம். ஒரு வில்லனைப் பின்னணியாகக் கொண்டு கதை நடக்கும். பிரகாஷ்ராஜ் சார் மிரட்டியிருக்கிறார். இமான் சார் உடன் 7 -வது படம், இன்னும் நிறையப் படங்கள் வேலை செய்வோம். விஜய் ஆண்டனி சாருடன், முதல் முறையாக வேலை செய்கிறேன். உங்கள் படம் சார் நீங்கள் சொல்வதை செய்கிறேன் என்று வந்தார், அவருக்கு நன்றி.
வெண்ணிலா கபடிக் குழு படத்திற்குப் பிறகு நிறையக் கதாபாத்திரங்கள். சத்யராஜ் சார் மிக முக்கியமான ரோல், அவரைச் சுற்றி 4 பேர் அதேபோல், விஜய் ஆண்டனியை சுற்றி 4 பேர் எனப் பெரிய கூட்டம் படத்தில் இருக்கும். ஃபரியா அப்துல்லா அற்புதமாக நடித்துள்ளார். மிக சிக்கலான கதை, அதை மிக எளிமையாகச் சொல்ல முயன்றுள்ளோம். எனக்காக இப்படத்தில் கடுமையாக உழைத்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கு நன்றிகள். இந்தப் படம் உருவாக்கியது மிக இனிமையான அனுபவம். இது டீசர் விழா தான், இன்னும் நிறைய விழா இருக்கிறது. இன்னும் நிறைய பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி என்று பேசினார்.