சினிமா செய்திகள்

ரசிகர்கள் காட்சிகளுக்கு விதிமுறைகள்- நீதிமன்றம் உத்தரவு

Published On 2023-10-20 17:45 IST   |   Update On 2023-10-20 17:45:00 IST
  • நெல்லையை சேர்ந்த அய்யா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
  • இந்த மனு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியிடப்படும் திரைப்படங்களின் ரசிகர்கள் காட்சிகளுக்கு அரசு விதிகள் வகுத்து வரைமுறைப்படுத்த உத்தரவிட கோரி நெல்லையை சேர்ந்த அய்யா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் சிறப்பு காட்சியின் போது, திரையரங்குகள் முன்பு 24 மணி நேரமும் பெரும் கூட்டமாக நின்று கொண்டு பட்டாசு வெடிப்பது, பிளக்ஸ், கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வது என பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துவதால், போக்குவரத்தும், பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் இந்த காட்சிகளை முறைப் படுத்த விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, புதிய திரைப்படங்கள் வெளியாகும் போதும், நிகழ்ச்சிகள் நடைபெறும் போதும், பொது அமைதியை பேணவும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும் விதிகள் வகுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இதுசம்பந்தமாக உள்துறை செயலாளருக்கு தான் அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ரசிகர்கள் காட்சிகளால் எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என மனுதாரர் விளக்கவில்லை. அரசு உள்துறை செயலாளர் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

Similar News