வாரிசு: 'ரஞ்சிதமே' பாடல் காப்பியடிக்கப்பட்டதா..? விமர்சிக்கும் ரசிகர்கள்..
- விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
- இந்த படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் யூட்டியூப்பில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.
வாரிசு
இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது. தொடர்ந்து இந்த பாடல் ௨௬ மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை யூட்டியூப்பில் முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது.
வாரிசு
இந்நிலையில், 'ரஞ்சிதமே' பாடல் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது, 1994-ஆம் ஆண்டு வெளியான 'உளவாளி' படத்தில் இடம் பெற்றுள்ள 'மொச்ச கொட்ட பல்லழகி' பாடலின் மெட்டுக்களை கொண்டு 'ரஞ்சிதமே' பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தமனின் சில பாடல்கள் இவ்வாறு வேறு படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.