null
VIDEO: தொடங்கும் 'SSMB29' படப்பிடிப்பு.. அதிரடி அப்டேட் கொடுத்த ராஜமௌலி.. மகேஷ் பாபு மாஸ் ரிப்ளை
- பெரும் பகுதி படப்பிடிப்பு அமேசான் காடுகளில் நடத்தப்படும் என்றும் ராஜமவுலி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
- வில்லன் கதாப்பாத்திரத்திற்கு மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. தமிழில் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி, கில்லி ஆகியவை மகேஷ் பாபு தெலுங்கில் நடித்த படங்களின் ரீமேக் ஆகும்.
பூரி ஜெகன்னாத், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், உள்ளிட்ட தெலுங்கின் முன்னணி இயக்குனர்கள் பலருடன் பணியாற்றிய மகேஷ் பாபு தனது 29 ஆவது படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இந்த படத்தை இயக்க உள்ளவர், தெலுங்கு சினிமாவை உலகளவில் திரும்பிப்பார்க்க வைத்த ராஜமௌலி.
இவர்கள் இருவரின் காம்போ பல காலமாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. முன்னதாக சாம்ராட் என்ற படத்தை மகேஷ் பாபுவை வைத்து ராஜமௌலி இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் மகேஷ் பாபுவின் 29 ஆவது படத்தை ராஜமௌலி இயக்குகிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடைசியாக திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குண்டூர் காரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. ராஜமௌலியைப் பொறுத்தவரை பாகுபலி 2 பாகங்களுக்கு பிறகு RRR மூலம் மற்றொரு ஹிட் கொடுத்தார். இந்நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் SSMB29 திரைப்படம் அதிக பட்ஜட்டில் ஹாலிவுட் தரத்தில் உருவாக உள்ளது.
அனைத்து மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர் நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. உலகத்தை சுற்றும் ஒரு சாகச பயணத்தை பின்னணியாக கொண்டு தயாராகும் படம் இது என்றும் பெரும் பகுதி படப்பிடிப்பு அமேசான் காடுகளில் நடத்தப்படும் என்றும் ராஜமவுலி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
படத்தின் நாயகியாக பிரியங்கா சோப்ராவும் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
திரைப்படத்தின் இசையை எம்.எம் கீரவாணி மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை பிஎஸ் வினோத் மேற்கொள்ளவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த ஜனவரியில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பதை குறிக்கும் விதமாக ராஜமௌலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிங்கத்தை கூண்டுக்குள் வைத்தது போலவும், ராஜமௌலி பாஸ்போர்ட்டை கையில் வைத்திருப்பது போலவும் கிராபிக்சில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடும் மகேஷ் பாபுவை படப்பிடிப்புக்காக தனது கட்டுப்பாட்டில் எடுத்து போல் நகைசுவையாக ராஜமௌலி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு நடிகர் மகேஷ் பாபு, "ஒரு வாட்டி கமிட் பண்ணிட்டனா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன்" என ரிப்ளை செய்துள்ளார். இந்த வசனம் அவர் நடித்த போக்கிரி படத்தில் இடம்பெற்றது.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ராஜமௌலியின் இன்ஸ்டாகிராமில் பதவிடப்பட்ட இந்த ரீலிஸ் வீடியோ சில மணி நேரங்களில் 1.4 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.