ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் முதலிடத்தில் நீடிப்பு: டாப்-10 பவுலர்களில் 3 இந்திய வீரர்கள்
- நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் பின்தங்கி, 14வது இடத்தில் உள்ளார்.
- ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 434 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் மற்றும் 2வது இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடியதால், அவர் 887 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் லபுசேன் முதலிடத்தில் இருந்து 3வது இடத்திற்கு பின்தங்கினார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 2ம் இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 4வது இடத்திலும் உள்ளனர். டாப்-10 பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே உள்ளார். இந்திய வீரர் ரிஷப் பண்ட் 10வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் பின்தங்கி, 14வது இடத்தில் உள்ளார். கேப்டன் ரோகித் சர்மா 12வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 860 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முறையே 8வது மற்றும் 9வது இடங்களில் நீடிக்கின்றனர். ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 434 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் 2வது இடத்திலும், அக்சர் பட்டேல் 4வது இடத்திலும் உள்ளனர்.