இந்திய அணியின் பயிற்சியாளராக டோனி தான் எனது முதல் தேர்வு- முன்னாள் பாக். வீரர் சல்மான் பட் கருத்து
- எம்.எஸ்.டோனி ஒரு கேப்டனாக வெற்றிகண்டுள்ளார்.
- அதிக வாய்ப்புகளை கொடுத்தால் தான் சில சிறந்த வீரர்களை கண்டுபிடிக்க முடியும்.
மும்பை:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி மிகவும் மோசமாக சொதப்பியது. 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அரையிறுதி போட்டியில் தோற்றதை இன்றும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து அடுத்த முறையாவது இந்திய அணி வெற்றி பெற என்ன செய்ய வேண்டும், யார் யாரையெல்லாம் மாற்ற வேண்டும் என விவாதங்கள் எழத்தொடங்கியுள்ளது.
அதில் பலரின் வாய்களில் இருந்து வரும் பெயர் எம்.எஸ்.டோனி தான். அதாவது இந்தாண்டு ஐபிஎல் தொடருடன் டோனி ஓய்வு அறிவிக்கலாம். அதன்பின் அவரை இந்திய அணியின் இயக்குநராக முழு நேர பதவி கொடுக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இதற்காக டோனிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் புதிய யோசனையை வழங்கியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
வி.வி.எஸ்.லக்ஷ்மண் மற்றும் விரேந்திர சேவாக் போன்ற வீரர்கள் மிகவும் சிறந்தவர்கள் தான். ஆனால் ஒரு பயிற்சியாளருக்கு தலைமை பண்பு மற்றும் வியூகங்கள் வகுப்பதில் அதிக அனுபவம் வேண்டும். அப்போது தான் வீரர்களுக்கு யோசனைக்கூற முடியும். அதற்கு டோனி தான் சரிபட்டு வருவார்.
எம்.எஸ்.டோனி ஒரு கேப்டனாக வெற்றிகண்டுள்ளார் என்பதை பாருங்கள். எனவே அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட வைக்க வேண்டும். அப்போது தான் இந்திய அணிக்கு நல்லதாக இருக்கும். இது ஒருபுறம் இருக்க டோனி சிஎஸ்கே அணிக்கும் ஆலோசகராக செயல்படுவார் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை தரவேண்டும். அதில், ரிஸ்க் எடுக்காமல் எதுவுமே வராது. எல்லா முறையும் வெற்றி மட்டுமே வரும் என நினைக்கக்கூடாது. அதிக வாய்ப்புகளை கொடுத்தால் தான் சில சிறந்த வீரர்களை கண்டுபிடிக்க முடியும்.
என சல்மான் பட் கூறியுள்ளார்.