ஜூனியர் உலக கோப்பையில் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா இந்தியா?: ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்
- தென் ஆப்பிரிக்காவில் 15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
- நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
பெனோஸ்:
தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
சாம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை பெனோனி நகரில் நடக்கிறது. இந்த ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜூனியர் உலக கோப்பையை இந்தியா 5 முறை (2000, 2008, 2012, 2018, 2022) வென்றது. முகமது கைப், விராட் கோலி, உன்முக்த் சந்த், பிரித்வி ஷா, யாஷ் துல் ஆகியோர் தலைமையில் கோப்பை கிடைத்தது.
இந்தியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இந்தியா 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
உதய் சஹாரன் தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. உதய் சஹாரன் 389 ரன்னும், முஷீர் கான் 338 ரன்னும், சச்சின் தாஸ் 294 ரன்னும் எடுத்து முதல் 3 இடங்களில் உள்ளனர். இதில் முஷீர் கான் 2 சதம் அடித்துள்ளார்.
பந்துவீச்சில் சவுமி குமார் பாண்டே 17 விக்கெட்டும், ரமன் திவாரி10 விக்கெட்டும் கைப்பற்றினர். ராஜ் லிம்பானி, முருகன் அபிஷேக் ஆகியோரும் பந்துவீச்சில் உள்ளனர். அதுபோல் ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, பிரியன்ஷு மோலியா ஆகிய பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
ஆஸ்திரேலியா 3 முறை (1988, 2002, 2010) கோப்பையை வென்றுள்ளது. அந்த அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஹத் வெய்ப்ஜென் தலைமையிலான அந்த அணியும் பேட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் உள்ளது. அந்த அணியில் ஹாரி டிக்சன் 267 ரன்னும், ஹக் வெய்ப்ஜென் 256 ரன்னும் எடுத்துள்ளனர். பந்துவீச்சில் டாம் ஸ்ட்ரேக்கர், வீட்லேர் தலா 12 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.
இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. ஆஸ்திரேலியாவும் தோல்வியைச் சந்திக்கவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முடிவு இல்லை.
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு முன்பு இரண்டு முறை (2012, 2018) மோதியுள்ளன. இரண்டிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.