5 விக்கெட் வீழ்த்தி ரேணுகா அசத்தல்... இங்கிலாந்து அணியை 151 ரன்களில் கட்டுப்படுத்தியது இந்தியா
- அதிரடியாக ஆடிய ஸ்கிவர் புரூண்ட் அரை சதம் அடித்த நிலையில் அவுட் ஆனார்.
- எமி ஜோன்ஸ் 27 பந்தில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகளாக சோபியா மற்றும் வியாட் ஆகியோர் களமிறங்கினர். இதில் சோபியா 10 ரன்னிலும், வியாட் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தகேப்சி 3 ரன்னில் விக்கெட்டை இழந்தார். முதல் மூன்று விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 29 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து களம் புகுந்த கேப்டன் ஹெதர் நைட் மற்றும் நாட ஸ்கிவர் பிரண்ட் ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய ஸ்கிவர் பிரண்ட் அரை சதம் அடித்த நிலையில் அவுட் ஆனார். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த ஹெதர் நைட் 28 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
இறுதியில் எமி ஜோன்ஸ் அதிரடியாக ஆடினார். அவர் 27 பந்தில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேத்தரின் அடுத்த பந்திலேயே ஆட்டம் இழக்க, இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.