ஆன்மிகம்
பவுர்ணமி பூஜையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன் காட்சியளித்தார்.

பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2017-07-10 11:54 IST   |   Update On 2017-07-10 11:54:00 IST
திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி பூஜைகளும், ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். மேலும் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜைகளுடன், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதில் சிவகங்கை மட்டுமின்றி மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், பழம், பன்னீர், மஞ்சள், இளநீர், திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்டவைகளால் அம்மனுக்கும், அடைக்கலம் காத்த அய்யனாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பவுர்ணமி பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் இளையராஜா, அறங்காவல் குழு தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் அறங்காவல் உறுப்பினர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Similar News