- அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுபாக்கியத்துடன் வாழ்வார்கள்.
- பெண்களுக்கு தாலி பாக்கியம் நிலைக்கும்.
அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், அதை ஐதீகப்படி எப்படி செய்வது என்பது சிலருக்கு மட்டுமே தெரிகிறது.
அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையை படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதை தீர்த்துக்கொள்ள அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
மன்னன் மகிழ்ச்சியோடு இருந்த போது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன் இளமைப்பருவத்தை எட்டும் போது இறந்து போவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான்.
ஒருநாள் காளி கோவில் ஒன்றில் அவன் வழிபட்ட போது உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.
இளமை பருவம் வந்ததும் இளவரசன் ஒருநாள் இறந்து போனான். மன்னன் அவனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளை காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்த பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்... தவித்தாள்...
தனக்கு தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள்.
உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு மனம் இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர் பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் அமாவாசை நாளாகும்.
தனக்கு அருளிய தேவியிடம் அந்த பெண் இருண்டுபோன தன் வாழ்வை ஒளிபெறச் செய்தது போலவே அமாவாசை நாட்களில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டி னாள்.
மகிழ்ந்த அம்பிகை, அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களை உரியவர்களுக்கு தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.
அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது.
அத்துடன் வீடுகளில் மறைந்த முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால் நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.