வழிபாடு

கன்னியாகுமரியில் நடைபெறும் `பலிகர்ம பூஜை'

Published On 2025-01-27 08:28 IST   |   Update On 2025-01-27 08:28:00 IST
  • முக்கடலும் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.
  • கன்னியாகுமரி, காசிக்கு நிகரான புண்ணிய தலமாக விளங்குகிறது.

ஆடி, மகாளய மற்றும் தை அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறப்பு வாய்ந்த இடங்களில் ஒன்றாக கன்னியாகுமரி விளங்குகிறது.


நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி, காசிக்கு நிகரான புண்ணிய தலமாக விளங்குகிறது. இதனால் மறைந்த நமது முன்னோர்களுக்கு கன்னியாகுமரியில் தர்ப்பணம் கொடுப்பது சாலச் சிறந்தது என்று பலரும் கருதுகின்றனர்.

அதற்கு காரணம் இங்கு முக்கடல்கள் சங்கமிப்பது தான். இந்திய பெருங்கடல், வங்கக்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் இங்கு தான் சங்கமிக்கிறது. முக்கடலும் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.

இங்கு மற்ற அமாவாசை நாட்களை விட தை, ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசையின் போது ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். இவர்கள் முக்கடல்கள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் கோவில் கொடைவிழா, கும்பாபிஷேகம், வருஷாபிசேகம் போன்றவற்றுக்கு இங்கிருந்து புனிதநீர் எடுத்துச் செல்வது வழக்கமான நிகழ்வாக இருக்கிறது.

அத்தகைய புனிதம் நிறைந்த கன்னியாகுமரியில் தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள். இதற்காக அவர்கள் முந்தைய நாளிலேயே கன்னியாகுமரிக்கு வந்து விடுவார்கள்.


பின்பு தை அமாவாசை தினத்தில் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள். மேலும் பலிகர்ம பூஜை நடத்துவார்கள்.

அமாவாசை நாளில் இங்கு தர்ப்பணம் கொடுக்க வருபவர்கள், கடலில் நீராடிவிட்டு, ஈரத் துணியுடன் கடற்கரையில் உள்ள 16 கால் மண்டபத்தை சுற்றி இருக்கும் வேத விற்பன்னர்கள் மூலம் பலிகர்ம பூஜையில் ஈடுபடுவார்கள்.


வாழை இலையில் பச்சரிசி, எள், உதிரிப்பூக்கள், தர்ப்பப் புல் மற்றும் மாவு பிண்டம் கொண்டு தர்ப்பணம் கொடுப்பார்கள். பின்னர் இலையுடன் சேர்த்து அவற்றை எடுத்துக் கொண்டு கடலில் சென்று பின்னோக்கி போட்டுவிட்டு கடலில் குளித்து கரையேறுவார்கள்.

கன்னியாகுமரியில் அதிகாலை 3 மணிக்கு தொடங்கும் தை அமாவாசை தர்ப்பண வழிபாடுகள் மதியம் வரை நடந்தபடி இருக்கும். 

Tags:    

Similar News