வழிபாடு

பழனியில் புதிய தேர் வெள்ளோட்டம்: சேகர்பாபு தொடங்கி வைத்தார்

Published On 2025-01-27 10:56 IST   |   Update On 2025-01-27 10:57:00 IST
  • தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
  • ரூ.46 லட்சத்தில் புதிய தேர் சீரமைக்கப்பட்டுள்ளது.

பழனி:

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்டவை வெகு விமர்சையாக நடைபெறும். இதில் பங்குனி உத்திர தேரோட்டம் கிரி வீதிகளிலும், தைப்பூசத் தேரோட்டம் ரத வீதிகளிலும் நடைபெறும்.

இந்த வருடத்துக்கான தைப்பூசத் திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வருகை தருவார்கள்.

தற்போது தைப்பூசத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே தினத்தோறும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச தேரோட்டம் நடைபெறும் போது முத்துக்குமார சாமி, வள்ளி தெய்வானை பெரிய தேரிலும், விநாயகர், சண்டிகேஸ்வரர் சிறிய தேரிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த தேர்கள் பெரியநாயகி அம்மன் கோவில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேரோட்டத்துக்கு பயன்படும் தேர் பல வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது என்பதால் சேதமடைந்து இருந்தது. எனவே அதனை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் ரூ.46 லட்சத்தில் புதிய தேர் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று (27-ந் தேதி) வெள்ளோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. புதிய தேரில் விநாயகர், முருகன், சிவன், பார்வதி உள்ளிட்ட தெய்வ உருவங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இன்று சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வெள்ளோட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலெக்டர் பூங்கொடி, அமைச்சர் அர.சக்கரபாணி, சச்சிதானந்தம் எம்.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், சார் ஆட்சியர் கிஷன் குமார், கோவில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதிய தேர் ரத வீதிகளில் உலா வந்த போது ஏராளமான பக்தர்கள் அதனை கண்டு பரவசமடைந்தனர்.

வருகிற தைப்பூசத் தேரோட்டத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த தேர் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News