ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்
- கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- நேற்று சித்திரை தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா நடந்தது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினமும் மாசாணியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் அம்மன் திருவீதி உலா நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை நிகழ்ச்சி கடந்த 11-ந் தேதி நள்ளிரவு ஆழியாற்றங்கரையில் நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று சித்திரை தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா நடந்தது.
பின்னர், 11 அடி அகலமும், 54 அடி நீளமும் கொண்ட குண்டம் மைதானம் தயார் செய்யப்பட்டது. இரவு 10 மணிக்கு அங்கு வாண வேடிக்கையுடன் 15 டன் விறகுகள் கொண்டு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பூக்குழியில் பல்வேறு வகையான மலர்களும் தூவப்பட்டன.
குண்டம் நிகழ்ச்சி காரணமாக கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிகப்பட்டு, மின்னொளியில் ஜொலித்தது.
சிகர நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று நடந்தது. குண்டம் திருவிழாவையொட்டி இன்று அதிகாலையிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டு இருந்தனர்.
குண்டம் இறங்க காப்பு கட்டியிருந்த பக்தர்களும் குண்டம் இறங்குவதற்கு தயாராக இருந்தனர்.
காலை 6 மணிக்கு தலைமை பூசாரி குண்டம் முன்பாக சிறப்பு பூஜைகளை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து அம்மன் அருளாளி குண்டத்தில் பூப்பந்தை முதலில் உருட்டி விட்டார். அதன் பிறகு தலைமை பூசாரி, அருளாளிகள், முறைதாரர்கள் குண்டம் இறங்கினர்.
அவர்களை தொடர்ந்து காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் என ஒவ்வொருவராக மாசாணியம்மனை வழிபட்டபடியே குண்டம் இறங்கினர். ஆண் பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினர்.
ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்த பிறகு, பெண் பக்தர்கள் குண்டத்தில் பூ அள்ளிக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கென ஏராளமான பெண் பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பூ எடுத்து கொடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
குண்டம் இறங்கும் பகுதியில் தீயணைப்பு வாகனமும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அரசு மருத்துவர்கள், நர்சுகள் அங்கு அவசர தேவைகளுக்காக பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.
குண்டம் திருவிழாவை காண கோவை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
குண்டம் திருவிழாவை முன்னிட்டு பொள்ளாச்சி, கோவையில் இருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.
மேலும் குண்டம் திருவிழா காரணமாக ஆனைமலையில் நேற்று மாலை முதலே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.
திருவிழாவையொட்டி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாளை காலை (சனிக்கிழமை) 7.30 மணிக்கு கொடி இறக்குதல், 10.30-க்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜையும் நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.