பழனி தைப்பூச திருவிழா இன்று தெப்ப உற்சவத்துடன் நிறைவு
- ரூ.2.70 கோடிக்கு பஞ்சாமிர்தம் விற்பனை.
- அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி.
பழனி:
பழனியில் பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழா கடந்த 5-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி, வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தந்த சப்பரம், தோலுக்கிணியாள் போன்ற வாகனங்களில் ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கடந்த திங்கள்கிழமை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டமும், செவ்வாய்கிழமை மாலை தைப்பூச தேரோட்டமும் நடைபெற்றது. தேரோட்டம் நிறைவடைந்த நிலையிலும் பழனி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நகரத்தார் காவடி குழுவினர் பழனி மலைக்கோவிலுக்கு சென்று தங்கள் காவடிகளை செலுத்தி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நேற்று இரவு 9ம் நாள் நிகழ்ச்சியாக துறையூர் மண்டபத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாராசாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார்.
10ம் நாள் நிகழ்ச்சியாக இன்று தெப்ப தேேராட்டத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. பெரியநாயகி அம்மன் கோவில் அருகில் உள்ள தெப்பத்தில் இன்று இரவு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
அதன் பின்பு இரவு கொடியிறக்கம் நடத்தப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் 3 நாட்களில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்தனர். தேவஸ்தானம் சார்பில் விற்பனை செய்யப்பட்ட அபிஷேக பஞ்சாமிர்தத்தை அதிக அளவில் பக்தர்கள் வாங்கிச் சென்றனர்.
3 நாட்களில் மட்டும் 4 லட்சத்தி 26 ஆயிராயிரத்தி 858 பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனையாகி உள்ளது. இதன் மூலம் ரூ.2 கோடியே 70 லட்சத்தி 13 ஆயிரத்தி 890 வருவாய் கிடைத்துள்ளது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி நகரில் இலவச பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு சிறப்பு பஸ்களும், பழனியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விழாக்கால பஸ்களும் இயக்கப்பட்டன. இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.40 லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது.