பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாளை குண்டம் திருவிழா: வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்
- தீ மிதிக்க வரிசையில் இடம் பிடித்து பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த குண்டம் திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். மேலும் அம்மனை வழிபட்டு, குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சப்பரம் வீதி உலா கடந்த 21-ந் தேதி இரவு முதல் பண்ணாரி மற்றும் சத்தியமங்கலத்தை சுற்றி உள்ள கிராமங்களில் நடைபெற்றது. இந்த சப்பரம் மீண்டும் 28-ந் தேதி கோவிலை வந்தடைந்தது.
அதைத்தொடர்ந்து அன்று இரவு கம்பம் சாட்டப்பட்டது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள். இவ்வாறு தீ மிதிக்க வருபவர்கள் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க கோவில் வளாகத்தில் பரந்த அளவில் ஏற்கனவே தகரத்திலான பந்தல் போடப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு நாள் மட்டும் உள்ளதால் குண்டம் இறங்குவதற்காக கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். குறிப்பாக தர்மபுரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் அதிகமானோர் வந்து குண்டம் இறங்குவதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளில் நேற்று காலை முதல் வரிசையில் உட்கார்ந்து இடம் பிடித்து காத்திருக்கிறார்கள். மேலும் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் பல்வேறு பகுதிகளில் உட்கார்ந்தும், படுத்து ஓய்வு எடுத்தபடியும் தீ மிதிப்பதற்காக காத்திருக்கிறார்கள்.