பிரம்மோற்சவ விழா: அனுமன், யானை வாகனங்களில் கல்யாண வெங்கடேஸ்வரர் உலா
- இன்று சூரிய, சந்திரபிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வதுநாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை அனுமன் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், வெங்கடாத்திரி ராமுடுவாக எழுந்தருளி கோவிலின் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.வாகன வீதிஉலாவுக்கு முன்னால் மகா விஷ்ணு, ராமர், அனுமன் வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பஜனைகள் குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். பெண்கள், சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடினர். கேரள செண்டை மேளம் இசைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணிவரை வசந்தோற்சவம் நடந்தது. வசந்த காலத்தில் நடத்தப்படும் கைங்கர்யங்களால் சாமிகள் சோர்வடைவார்கள் என்பதால், அதில் இருந்து விடுபடும் நிகழ்ச்சியாக வசந்தோற்சவம் நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை தங்கத்தேரோட்டம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பின்னர் 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாணவெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந் தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் சிறப்புநிலை துணை அதிகாரி வரலட்சுமி, கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திரபிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.