தாயுமானசுவாமி கோவிலில் 3-ந்தேதி தெப்ப உற்சவம்
- ஒவ்வொரு நாளும் ஒரு வாகனங்களில் வீதிஉலா நடைபெறும்.
- 4-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை உடனாய தாயுமானவசுவாமி கோவிலுக்கு சென்று மனமுருகி சிவனை வழிபட்டால் சுகப்பிரசவத்தில் குழந்தைப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புவாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக தாயுமான சுவாமி சன்னதியில் உள்ள தங்ககொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மேளதாளங்கள் முழங்கிட ரிஷபக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி சுவாமி, அம்பாள் முறையே கற்பகவிருட்ச வாகனம், பூதவாகனம், வெள்ளி ரிஷப வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனங்கள் என ஒவ்வொரு நாளும் ஒரு வாகனங்களில் புறப்பாடு செய்யப்பட்டு வீதிஉலா நடைபெறும். இதில் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி இரவு நடைபெறுகிறது. அப்போது அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். தொடர்ந்து 4-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. அன்று இரவு அவரோகணம் எனப்படும் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.