வழிபாடு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-3)

Published On 2023-12-19 04:54 GMT   |   Update On 2023-12-19 04:54 GMT
  • தன் திருவடியால் மூவுலகையும் அளந்தவன் திருமால்.
  • என் அப்பன், ஆனந்தன், அமுதம் போன்றவன்

திருப்பாவை

பாடல்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து

ஓங்குபெருஞ்செந்நெலோடு கயலுகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

விளக்கம்

வாமன அவதாரத்தில், மாவலி சக்கர வர்த்தியிடம் மூன்றடி மண்கேட்டு, வானளாவ உயர்ந்து தன் திருவடியால் மூவுலகையும் அளந்தவன் திருமால். மேன்மைமிக்க அவருடைய பெயரைப் பாடி நீராடினால், நாடு முழுவதும் மாதம் மூன்று முறை மழை பெய்யும்.

நீர்வளம் பெருகி நெற்பயிர்கள் செழுமையாக உயர்ந்து வளரும். நெற்பயிர்களின் நடுவே கயல்மீன்கள் துள்ளும்.

அழகிய குவளை மலரில் புள்ளிகளைக் கொண்ட வண்டுகள் தேன் குடித்து மெய் மறந்து உறங்கும். தொழுவத்தில் புகுந்து பால் கறப்போர் பருத்த மடிகளை பற்றிக் கறக்க, வள்ளல் குணம்மிக்க பசுக்கள் குடம் நிறைய பாலைச் சுரந்து குடங்களை நிரப்பும். இப்படிப்பட்ட நீங்காத செல்வத்தை நாம் இந்த பாவை நோன்பால் அடைவோம்.

திருவெம்பாவை

பாடல்

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்

அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்

பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ

எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ

சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை

இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

விளக்கம்

முத்தைப்போன்று வெண்மையான பற்களை உடையவளே! முன்பெல்லாம் எல்லோருக்கும் முன்பாகவே எழுந்திருந்து, இறைவனை 'என் அப்பன், ஆனந்தன், அமுதம் போன்றவன், இன்பமே வடிவானவன்' என்று இனிக்க இனிக்க பேசுவாய். அப்படிப்பட்ட நீ, நாங்கள் இத்தனைமுறை அழைத்தும் உறங்கிக் கொண்டிருக்கிறாய். வந்து கதவை திறந்து விடு!

நீங்கள் எல்லாம் இறைவனுடைய பழைய அடியார்கள். இறைவன் அருகில் இருப்பவர்கள். அதிக பற்றுடையவர்கள். அவன் பால் உரிமை உடைய நீங்கள் என்னுடைய தவறை பெரிதுபடுத்தாமல் மன்னித்து ஏற்றால் இழுக்கு ஆகுமா? நீ இறைவனுடன் பற்றும், அன்பும் கொண்டவள் என்று எல்லோரும் அறிவோம்.

அழகான இதயத்தை உடையவர்கள் சிவபெருமானை நினைத்து பாடாமல் இருக்க மாட்டார்கள்!. உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இதுவும் தேவைதான்.

Tags:    

Similar News