வழிபாடு

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு

Published On 2023-01-12 14:18 IST   |   Update On 2023-01-12 14:18:00 IST
  • நாளை தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
  • 15-ந்தேதி தெப்போற்சவம் நடக்கிறது.

கோபிசெட்டிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் மார்கழி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.

கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக கோவில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினார்கள். பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. குண்டம் இறங்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். கடந்த 6-ந் தேதி தேர் நிலை பெயர்தல் நிகழ்ச்சியும், 9-ந் தேதி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது.

அதைத் தொடர்ந்து 11-ந் தேதி மாவிளக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று இரவு11 மணி அளவில் கோவிலின் முன்புள்ள குண்டத்தில் பொங்கல் வைத்து பூஜை நடந்தது. பின்னர் 50 அடி குண்டத்தில் எரிகரும்பு (விறகுகள்) வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று அதிகாலை 4 மணியளவில் பூசாரிகள் அம்மனிடம் வாக்கு கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 5.30 மணியளவில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் தலைமை பூசாரி ஆனந்த் குண்டத்தில் உள்ள தீதனல் மற்றும் பழம், பூக்கள் ஆகியவற்றை வானத்தை நோக்கி வீசி, குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து முதன் முதலில் தீமிதித்து தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள் கைக்குழந்தைகளுடன் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.

குண்டம் இறங்குவதற்கு வசதியாக ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக நின்று குண்டம் மிதித்தனர். இதற்கான பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையில் இரண்டு டிஸ்பிக்கள் 13 இன்ஸ்பெக்டர்கள், 93 சப் இன்ஸ்பெக்டர்கள், 532 போலீசார் மற்றும் ஊர் காவல் படை வீரர்கள் என 800-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். மேலும், திருட்டு போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக மாறு வேடத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

குண்டம் விழாவையொட்டி அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நாளை (13-ந் தேதி) மாலை 4 மணியளவில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 14-ந் தேதி சனிக்கிழமை இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்ட மலர்ப்பல்லக்கில் கோபி நகருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

15-ந் தேதி கோபியில் தெப்போற்சவமும், 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை கோபி, புதுப்பாளையம், நஞ்சகவுண்டம்பாளையம் பகுதிகளில் மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறுகிறது. 21-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News