பட்டுக்கோட்டை நகரில் காவல் தெய்வமாய் வீற்றிருக்கும் நாடியம்மன்
- அம்மன் கோவில்களில் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் புகழ் பெற்றதாகும்.
- நாடியம்மனை நாள்தோறும் வணங்கினால் கோடி புண்ணியம்
பட்டுக்கோட்டை நகரில் காவல் தெய்வமாய் வீற்றிருந்து நாடி வந்தோருக்கு நலம் பல நல்கி வரும் நாடியம்மனை நாள்தோறும் வணங்கினால் கோடி புண்ணியம். மராட்டிய மன்னர்கள் காலத்தில் ஊருக்கு தெற்கே காட்டில் சுயம்புவாய் தோற்றிய தெய்வம் நாடியம்மன். இந்த ஊரில் பெண் என்றால் நாடியம்மை என்றும், ஆணுக்கு நாடிமுத்து என்றும் பெயர் வைப்பது வழக்கமாகி விட்டது. தஞ்சை மாவட்டத்தில் சக்தி வாய்ந்த அம்மன் கோவில்களில் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் புகழ் பெற்றதாகும்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 27.1.2022-ந்தேதி குடமுழுக்கு விழா நடந்தது. கடந்த 28-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் பங்குனி திருவிழா நடந்தது. அதனை தொடர்ந்து 4.4.23-ந்தேதி இரவு நாடியம்மன் மூலஸ்தானத்திலிருந்து வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகளுடன் மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
பின்னர் அம்பாள் வீதி உலா நடந்தது. விழாவில் தினமும் கலை நிகழ்ச்சிகளும், இன்னிசை கச்சேரிகளும் நடைபெற்றன. பட்டுக்கோட்டை வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் புஷ்பபல்லக்கில் நாடியம்மன் நவநீதசேவையும்(வெண்ணெய்த்தாழி), இரவு குதிரை வாகன காட்சியுடன் நாடியம்மன் மூலஸ்தானம் சென்றடையும் நிகழ்ச்சியும் நடந்தது.
மூலஸ்தானத்தில் காவடி திருவிழாவையொட்டி ஏராளமான பெண்கள் மாவிளக்கு போட்டு நாடியம்மனை வழிபட்டனர். இதில் ஏராளமானோர் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
பட்டுக்கோட்டை தேரடித்தெருவிலிருந்து தேரோட்டம் தொடங்கி வடசேரி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, தலைமை தபால் நிலையம், பெரிய தெரு, மணிக்கூண்டு வழியாக தேரடித்தெருவில் உள்ள தேர் நிலைக்கு செல்லும். இதில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, திருவோணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்துகொள்கின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு பல இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிடாரி அம்மன் சிலை
ஒருமுறை தஞ்சை மராட்டிய மன்னன் ஒருவன் காட்டில் வேட்டையாடி வந்தபோது, அப்போது குறுக்கிட்ட ஒரு மிருகத்தைத்துரத்திக்கொண்டு சென்று, அது பிடிபடாமல் போகவே அதன்மீது குறிவைத்துத்தாக்க அது ஓர் புதருக்குள் சென்று ஒளிந்து கொண்டதாம். அது அடிபட்டிருந்தால் அந்தப்புதருக்குள்தான் இருக்க வேண்டுமென்று, மன்னன் ஆட்களை விட்டு அங்கு தேடச்சொன்னான்.
அப்போது ஆட்கள் புதரை நீக்கிப் பார்த்த போது அங்கு ரத்தம் ஒழுக ஓர் அழகிய பிடாரியம்மன் சிலை தென்பட்டதாம். அதிர்ச்சியடைந்த மன்னன் உடனே அந்த சிலையை வெளியே கொணர்ந்து அதனை சுத்தம் செய்து, பட்டுக்கோட்டையின் கோட்டைப் பகுதியில் இருந்த சிவன் கோயில் பூசாரிகளை அழைத்து பிடாரியம்மனுக்கு அது கிடைத்த இடத்திலேயே ஓர் கோவில் கட்டி பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டான். அவ்வண்ணமே, அந்த பிடாரி சிலை வனாந்திரமாய் இருந்த அந்த இடத்தில் கோவில் கொண்டது.