வழிபாடு

மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-4)

Published On 2024-12-19 02:02 GMT   |   Update On 2024-12-19 02:02 GMT
  • கடலைப் போன்ற அகன்ற பரப்புடைய நீரைக் கொடுக்கக்கூடிய மழைக் கடவுளே!
  • சிவபெருமானை பாடித் தொழுது உள்ளம் உருகி நிற்கின்றோம்!

திருப்பாவை

பாடல்:

ஆழி மழைக்கண்ணா! ஒன்றுநீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்

ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

விளக்கம்:

கடலைப் போன்ற அகன்ற பரப்புடைய நீரைக் கொடுக்கக்கூடிய மழைக் கடவுளே! நீ ஒன்றையும் மறைக்காதே! பெரும்கடலில் புகுந்து நீரை முகந்து, சத்தத்துடன் மேலே எழுந்து, காலத்தின் முதன்மையாய் விளங்கும் எம்பெருமானின் வடிவம் போல உடல் கறுத்து. பத்மநாபனின் வலது கையில் விளங்கும் சக்கரம் போல மின்னுவாய். அவன் இடது கரத்திலுள்ள வலம்புரிச் சங்கைப் போல இடி இடித்து முழங்குவாய். அவனது சாரங்கம் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல, பெய்யும் மழை உலகை வாழச் செய்வதாய் இருக்கட்டும். நாங்களும் மார்கழி நோன்பிற்காக மகிழ்ந்து நீராடுவோம்!

திருவெம்பாவை

பாடல்:

ஒண்ணித் திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?

எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே!

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்

கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உள்நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயே வந்து

எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

(தோழிகள்), "ஒளி வீசும் முத்துக்களைப் போன்ற சிரிப்பை கொண்ட பெண்ணே! உனக்கு இன்னுமா பொழுது விடியவில்லை?". (உறங்கும் பெண்), "கிள்ளை மொழி பேசும் நம் தோழிகள், அனைவரும் வந்து விட்டனரா?". (தோழிகள்), "நீயே எண்ணிப் பார்த்துக்கொள். நாங்கள் சொல்ல மாட்டோம். அதுவரை உறங்கி வீணாக காலத்தைக் கடத்தாதே. விண்ணுலகில் உள்ள யாவர்க்கும் அருமருந்தானவனும், வேதத்தின் உயர் பொருளாக விளங்குபவனும், கண்ணுக்கு இனிய பரம்பொருளாக இருப்பவனுமாகிய சிவபெருமானை பாடித் தொழுது உள்ளம் உருகி நிற்கின்றோம்! நீயே வந்து எண்ணிப் பார்த்து, எண்ணிக்கை குறைந்தால் தூங்கிக் கொள்வாய்!"

Tags:    

Similar News