ஆஞ்சநேயரை சிரஞ்சீவியாக மாற்றிய பக்தி
- இறப்பின்றி வாழும் பெருமை பெற்றவர்களை, `சிரஞ்சீவி' என்று கூறுவார்கள்.
- சிரஞ்சீவிகளாக ஏழு பேர் இருக்கின்றனர்.
இறப்பின்றி வாழும் பெருமை பெற்றவர்களை, "'சிரஞ்சீவி' என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட சிரஞ்சீவிகளாக ஏழு பேர் இருக்கின்றனர். ராவணன் தன் அண்ணன் என்றாலும், நியாயத்தின் பக்கம் நின்றதற்காக விபீஷணனுக்கு சிரஞ்சீவியாக வாழும் வாய்ப்பு கிடைத்தது.
வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணுவுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்ததால், மகாபலி சக்கரவர்த்தியும் சிரஞ்சீவி ஆனார்.
`சிவனே கதி' என்ற சராணகதி தத்துவத்தில் இருந்ததால் எமனிடம் இருந்து காப்பாற்றப்பட்டு என்றும் 16' என்ற வாழ்த்துடன் சிரஞ்சீவியானார் மார்க்கண்டேயர்.
படிப்பவர்களின் பாவங்களைப் போக்கும் புராணங்களையும், காவியங்கைளையும் எழுதியதோடு, வேதங்களை நான்காக பகுத்ததால் வேதவியாசரும் சிரஞ்சீவியானார்.
தந்தையின் சொல்லை மறுக்காமல் தாயைக் கொன்றதுடன், தன் தந்தையாலேயே தாயை உயிர்ப்பிக்க செய்த பரசுராமரும் சிரஞ்சீவி பட்டம் பெற்றார்.
கவுரவர்களின் பக்கம் நின்று, கடைசி வரை துரியோதனுக்காக போரிட்டதுடன், அபிமன்யுவின் மனைவி வயிற்றில் இருந்த கருவை கொல்ல அஸ்திரம் எய்ததால், துன்பத்தில் உழலும் பொருட்டு சிரஞ்சிவியாக மாறும் சாபத்தைப் பெற்றான், துரோணரின் மகன் அஸ்வத்தாமன்.
மேற்கண்ட ஆறுபேருக்கும் காரண காரியங்களால் வந்து சேர்ந்தது சிரஞ்சீவி பட்டம்.
ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி, ராமனுக்கு சேவை புரிந்த காரணத்தால் இந்த பட்டியலில் அனுமனும் இடம் பிடித்தார்.