பவானியில் செல்லியாண்டி அம்மன் கோவில் மாசி மாத பொங்கல் மற்றும் தேர் திருவிழா
- செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
- சேறு பூசிக்கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் காவல் தெய்வமாக செல்லியாண்டி அம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் மற்றும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்ற நிலையில் சென்ற ஆண்டு கோவில் மாசி மாத திருவிழா நடைபெறவில்லை.
கோவில் கும்பாபிஷேகம் டிசம்பர் மாதம் நடைபெற்று முடிந்த நிலையில் 48 நாட்கள் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மாசி மாத பொங்கல் மற்றும் தேர் திருவிழா பூச்சாட்டப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவையொட்டி நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை செல்லாண்டியம்மனுக்கு அபிஷேக விழா நடந்தது. இதில் பவானி, ஈரோடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கருவறைக்கு சென்று பக்தர்கள் கொண்டு வந்த மஞ்சள் நீர் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் தாங்களே அபிஷேகம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரான செல்லியாண்டியம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், திருமஞ்சனம் உட்பட பல்வேறு திரவிய ங்களால் மூலவருக்கு ஊற்றி விடிய விடிய சுமார் 15 மணி நேரத்தக்கும் மேலாக பக்தர்களே அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியான சக்தி அழைப்பு நிகழ்ச்சி மற்றும் பொங்கல் விழா இன்று (புதன்கிழமை) காலை கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி காலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எல்லை யம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து வரப்பட்டது.
மேளதாளங்கள் முழங்கள் குதிரைகளுடன் புதிய பஸ் நிலையம், மேட்டூர் ரோடு, அந்தியூர் பிரிவு உள்பட பல்வேறு ரோடுகள் வழியாக சக்தி அழைத்து வரப்பட்டது.
இதில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காய்கறிகள், உப்பு, மிளகு, சில்லரை காசுகள் என பல்வேறு பொருட்களை வேண்டுதல்கள் நிறைவேற்றும் வகையில் சூறை வீசப்பட்டது. இதை பக்தர்கள் பலர் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து பல்வேறு விதமான வேடங்கள் அணிந்தும், பக்தர்கள் உடலில் சேறு பூசிக்கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
சிறுவர்கள், சிறுமிகள் என பலரும் சேறு பூசிக் கொண்டு நோய் எதுவும் அண்டாமல் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
மேலும் இளைஞர்கள் பலர் அம்மன் உள்பட பல்வேறு வேடங்கள் அணிந்து கொண்டு வந்தனர். பலர் உடலில் வர்ணம் பூசிக் கொண்டு தாயே செல்லாண்டியம்மா என பக்தி கோஷம் முழங்க மேளதாளங்களுக்கு ஏற்ற வகையில் ஆடிக் கொண்டே வந்தனர்.
இதையடுத்து செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று மதியம் பக்தர்கள் ஏராளமானோர் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து இன்று மாலை பக்தர்கள் அலகு குத்தி கொண்டு, அக்னி சட்டி எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். இதனால் பவானி நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்படு கிறது. இதனால் நகரமே விழா கோலம் பூண்டு உள்ளது.
தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.