- கலியன் மாள்கின்ற போது, இனத்துக்கு இனம் பகையாகும்.
- கடல் கோபம் கொண்டெழுந்து சில இடங்களையே காவு கொள்ளும்
அகிலத்திரட்டில் 16-வது நாள் திரு ஏடு வாசிப்பில், பகவதி திருக்கல்யாணம் பாகத்தில் கலி அழிவது எப்போது என்பதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
அதன்படி, கலியன் யாராலும் வெல்லக் கூடாத வரம் பெற்று, அவன் தன் பெண்ணோடு (கலிச்சி) உகத்திற்கு செல்லும்போது, ரோம ரிஷி என்பவன், சிவனிடம் கேட்டான். "ஈஸ்வரரே, இந்த கலியன் இத்தனை வரம் பெற்று செல்கிறானே, எப்போது இவன் முடிவாகுவான்" என்று, அதற்கு சிவன் அளித்த பதிலை, மஹா விஷ்ணு, பகவதி திருக்கல்யாண பகுதியில், பகவதி அம்மையை சாந்தப் படுத்துவதற்கு சொல்லுவது போல அய்யா, நமக்குதெளிவாக தெரியப்படுத்துகிறார்.
அதில், கலியன் மாள்கின்ற போது, இனத்துக்கு இனம் பகையாகும், சிவ நினைவு இந்த தேசத்திலே செல்லாது, கொலை, களவு , கோள்கள் மிகுந்திருக்கும், தலைஞான வேதத்தை மக்கள் கைவிடுவர், நேர்மைக்கு காலம் நெகிழ்ந்துதான் இருக்கும், போருக்குத்தான் எல்லோரும் கருத்தாய் இருப்பார்.
அதாவது நிதானம் இருக்காது, கடல் கோபம் கொண்டெழுந்து சில இடங்களையே காவு கொள்ளும், மழை மறையும், காற்றானது நோய் காற்றாக வீசும், கீழ் எண்ணம் கொண்டவர்கள் மேல் நோக்க எண்ணம் கொண்டவர்களை வேலை கொள்வர், மனு நீதம் குன்றும், நியம் தப்பி நாட்டை அரசாள்வார்கள், பிராயம் வரும் முன்னே பெண்கள் தன் நிலை அழிவார்கள். அப்போது தெய்வ மடவார்கள் எல்லாம் தேசத்திலே வருவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.