வழிபாடு

திருத்தினை நகர் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடக்கிறது

Published On 2022-11-09 08:31 GMT   |   Update On 2022-11-09 08:31 GMT
  • கும்பாபிஷேக விழா நாளை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்குகிறது.
  • 11-ம் தேதி இரவு 7 மணிக்கு அம்மன் வீதிஉலா நடக்கிறது.

குறிஞ்சிப்பாடி அருகே திருத்தினை நகரில் பிரசித்தி பெற்ற சக்திமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை)கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து கும்பாபிஷேக விழா நாளை (வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தனபூஜை, பூர்ணாஹீதி ஆகியவை நடைபெறுகிறது.

பின்னர் மாலை 4 மணிக்கு வாஸ்து சாந்தி, ரக்‌ஷாபந்தனம், முதல் காலயாக சாலை பூஜை, மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து கும்பாபிஷேக நாளான நாளை மறுநாள் காலை 5.30 மணிக்கு 2-ம் கால யாக சாலை பூஜை, சூர்ய பூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, ஆஸ்த்ர ஹோமம், யாத்ரா தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளது.

பின்னர் 9 மணிக்கு யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று 10 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து மூலவர் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகர், காத்தவராயன், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதன்பிறகு மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு அம்மன் வீதிஉலா நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News