வழிபாடு

ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம்

Published On 2022-06-20 08:06 IST   |   Update On 2022-06-20 08:06:00 IST
  • புதுவை லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
  • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தான கல்யாண உற்சவ திட்டம் மற்றும் ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் சார்பில் புதுவை லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் 5-வது முறையாக ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் இன்று மாலை நடந்தது. திருக்கல்யாண உற்சவத்துக்காக திருமலையில் இருந்து உற்சவ பெருமாள் நேற்று இரவு புதுவைக்கு கொண்டு வரப்பட்டார்.

பின்னர் செல்லப்பெருமாள்பேட்டையில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில் எருந்தருளிய பெருமாள் அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு இன்று அதிகாலை சுப்ரபாத சேவை நடந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னர் புதுவை ஹெலிபேடு மைதானத்தில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நேற்று மாலை நடைபெற்றது. திருமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட உற்சவர் சிலைகளுக்கு பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமரிசையாக திருக்கல்யாண வைபகத்தை நடத்தினர். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி, செயல் அலுவலர் ஜவகர்ரெட்டி, கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி, உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணாராவ், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஏ.கே.டி.ஆறுமுகம், ராமலிங்கம், சிவசங்கரன் மற்றும் ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் தலைவரும், அமைச்சருமான லட்சுமிநாராயணன், செயலாளர் பாபுஜி, பொருளாளர் நவீன்பாலாஜி, முன்னாள் சபாநாயகர் சிவகொழுந்து உள்பட பலர் கலந்துகொண்டனர். புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து லாஸ்பேட்டைக்கு பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்புக்காக போலீசாருக்கும் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News