தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சவடி கோவிலில் சிறப்பு பூஜைகள்
- பஞ்சவடியில் பிரசித்திபெற்ற பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
- இது மத்திய திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.
பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அருகே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சாலையில் பஞ்சவடியில் பிரசித்திபெற்ற பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு திருப்பதி தேவஸ்தானத்தால் வழங்கப்பட்ட ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது மத்திய திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.
மத்திய திருப்பதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவாரி திருவேங்கடமுடையான் சாமிக்கு திருமலை திருப்பதியில் நடப்பது போன்றே 6 கால பூஜை சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் பிரதிவாரம் வியாழக்கிழமை நேத்ர தரிசன சேவையும், வெள்ளிக்கிழமை விசேஷ திருமஞ்சன சேவையும், சனிக்கிழமை சுப்ரபாதம் மற்றும் அர்ச்சனை சேவைகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
அதன் தொடக்கமாக தமிழ் புத்தாண்டையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு சுப்ரபாதம், சிறப்பு திருமஞ்சனம், தோமாலை சேவை மற்றும் அர்ச்சனை ஆகிய பூஜைகளை திருமலை திருப்பதியில் நடப்பது போன்றே பஞ்சவடி கோவில் மற்றும் மத்திய திருப்பதி வேங்கடாஜலபதி சன்னதியில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பூஜைகளில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள் டிரஸ்டின் அனுமதி பெற்று, பங்கேற்று புத்தாண்டில் சாமியின் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.