வழிபாடு

மதிய வேளையில் நடை சாத்தப்படாத `மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர்'

Published On 2025-03-10 10:14 IST   |   Update On 2025-03-10 10:14:00 IST
  • தினமும் 14 மணிநேரம் பக்தர்களின் குறை தீர்த்தருளுகிறார் கொளஞ்சியப்பர்.
  • இத்தலத்தில் பிராது கட்டுதல் என்று ஒரு வழிபாடு இருக்கிறது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பஸ் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது மணவாள நல்லூர் கொளஞ்சியப்பர் கோவில். இத்தலத்திற்கு செல்ல விருத்தாசலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதிகள் இருக்கின்றன.

இங்கே இன்னொரு வசதி, மற்ற கோவில்களைப் போல மதிய வேளையில் நடை சாத்தப்படாதது தான். காலை 6 முதல் இரவு 8 மணி வரை நடை திறந்தே இருக்கும். தினமும் 14 மணிநேரம் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் குறை தீர்த்தருளுகிறார் கொளஞ்சியப்பர்.

விநாயகருக்கும் கொளஞ்சியப்பருக்கும் தனித்தனி விமானங்கள் உள்ளன. சுமார் 3 உயரம் கொண்ட பலி பீட வடிவம் கொண்ட கொளஞ்சியப்பரின் பீடத்தில் ஷடாட்சரம் பொறிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது.


இந்த கொளஞ்சியப்பர் இப்பகுதி மக்கள் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் வாழும் பக்தர்களுக்கெல்லாம் மகா நீதிபதியாய் இருந்து நல்ல தீர்ப்பும் நல்வாழ்வும் வழங்கி அருள்கிறார்.

உண்மைதான், இத்தல நாதன் முருகன் ஒரு மகா நீதிபதிதான். இத்தலத்தில் பிராது கட்டுதல் என்று ஒரு வழிபாடு இருக்கிறது. கோவிலின் பிராகாரத்தில் அதற்காக முனீஸ்வரன் சந்நதி அருகே ஒரு இடமும் இருக்கிறது.

பிராது கட்டுவது என்றால் என்ன? கோவில் அலுவலகத்தில் மனு எழுதிட தாள் கிடைக்கிறது. அதில், 'மணவாளநல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு.......' என ஆரம்பித்து, 'நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன். இன்னாருடைய மகன். என் பெயர் இது..' என்பன போன்ற விவரங்களை எழுதி தனது குறை, கோரிக்கை என்ன என்பதையும் குறிப்பிட்டு, கொளஞ்சியப்பர் சன்னதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் தர வேண்டும்.


அதை, அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சன்னதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலில் கட்ட வேண்டும். பிராது கட்டியவர்களின் கோரிக்கை பிராது கொடுத்த 90 நாட்களுக்குள் ஈடேறும் என்பது பக்தர்களின் அனுபவம்.

குழந்தைப் பேறு, கடன் தொல்லை தீர, திருடு போன பொருள் கிடைக்க, ஏமாற்றப்பட்ட பணம் திரும்ப கிடைக்க, பிரிந்து இருக்கும் கணவன், மனைவி ஒன்று சேர, தீராத நோய் தீர, தொலைந்த கால்நடைகள் திரும்ப கிடைக்க, பங்காளி சண்டை, துரோகம் தொலைய, வேலை வேண்டி, வேலை மாற்றம் என பல கோரிக்கை களை பிராது சீட்டில் எழுதி, குமரன் குறைகளைத் தீர்த்தருள்வான் என்ற நம்பிக்கையோடு கட்டுகிறார்கள்.

Tags:    

Similar News