சமயபுரம் மாரியம்மனின் பச்சைப் பட்டினி விரதம் கதை!
- பச்சைப் பட்டினி விரதம் கடந்த 9-ந் தேதி தொடங்கியது.
- அம்மனே 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பு.
திருச்சியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது, சமயபுரம். பிரசித்திபெற்ற இந்த திருத்தலத்தில் சமயபுரம் மாரியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
மகாவிஷ்ணு எடுத்த அவதாரத்தில் ஒன்று, கிருஷ்ண அவதாரம். இந்த அவதாரத்தின்போது தேவகியின் பிள்ளையாக கிருஷ்ணரும், யசோதையின் பிள்ளையாக மாயா தேவியும் பிறந்தனர். இறையருளால் அவர்கள் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தேவகியின் பிள்ளையை கொல்வதற்காக வந்த கம்சன், குழந்தையை தூக்க முயன்றபோது, அந்தக் குழந்தை தன் உண்மையான உருவத்தைக் காட்டி நின்றது. மகாசக்தியாக தோன்றிய அந்த அன்னையின் எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் இருந்தன.
அந்த தேவியே 'மகாமாரி'. இந்த அன்னைதான் மக்களால் மாரியம்மனாக பூஜிக்கப்படுவதாக புராணம் சொல்கிறது.
திருவரங்கம் அரங்கநாத சுவாமியின் திருக்கோவிலில் தான், சமயபுரம் மாரியம்மன் திருமேனி இருந்ததாம். அந்த அன்னை உக்கிரமாக இருந்ததால், அப்போது இருந்த ஜீயர் சுவாமிகள் அம்மனின் திருவுருவத்தை மற்றொரு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்தார்.
திருவரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் இருந்து அன்னையின் திருமேனியை எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கிச் சென்றவர்கள், இளைப்பாறுவதற்காக திருமேனியை ஓரிடத்தில் வைத்தனர். அந்த இடம்தான், சமயபுரம் ஆகும்.
பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோவில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்து விட்டுச் சென்றனர்.
அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களைக் கூட்டிவந்து அதற்கு 'கண்ணனூர் மாரியம்மன்' என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினர்.
விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார். அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்.
அதன்படி அவர்கள் வெற்றிபெற்றதால், விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் 1706-ல் அம்மனுக்குத் தனியாக கோவில் அமைத்ததாக வரலாற்று சான்று கூறுகின்றன.
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோவில்தான், இன்று 'சமயபுரம் மாரியம்மன்' ஆலயமாக சிறப்புற்று விளங்குகிறது.
ஆலய அமைப்பு
இந்த ஆலயம், ஆகம விதிப்படியும், சிற்ப சாஸ்திரத்தின்படியும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் முகப்பில் நீண்ட பெரு மண்டபம் உள்ளது. இதனை 'பார்வதி கல்யாண மண்டபம்' என்கிறார்கள்.
மூன்று திருச்சுற்றுகளைக் கொண்டது இந்த ஆலயம். கிழக்கே சன்னிதித் தெருவில் விநாயகர் கோவிலும், தெற்கில் முருகன் கோவிலும், தேரோடும் வீதியின் வடக்கே மற்றொரு விநாயகர் கோவிலும் உள்ளன.
மேற்கில் ராஜகோபால சுவாமி அருள்பாலிக்கிறார். இத்திருக்கோவிலின் தல விருட்சமாக வேப்ப மரம் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இம்மரம், தற்போது திருக்காப்பு விண்ணப்பச் சீட்டை விண்ணப்பிக்கும் இடமாகத் திகழ்கிறது.
இரண்டாம் திருச்சுற்றில் விநாயகர் சன்னிதி, நவராத்திரி மண்டபம், அபிஷேக அம்மன் சன்னிதி, யாகசாலை, தங்கரத மண்டபம் உள்ளன. இரண்டாம் திருச்சுற்று முடிவடைந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம் காணப்படும்.
அதைத் தொடர்ந்து மாவிளக்கு மண்டபம் இருக்கிறது. கருவறைக்குச் செல்லும் வாசலின் இருபுறமும் துவார சக்திகளின் சுதை சிற்பம் உள்ளன. வலதுபுறம் கருப்பண்ணசாமி சன்னிதி உள்ளது.
கருவறைக்கும், மாவிளக்கு மண்டபத்துக்கும் இடைப்பட்ட பகுதிகள் மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் என்று அழைக்கப்படுகின்றன.
கருவறையை சுற்றி ஒரு பிரகாரம் உள்ளது. இங்கே விமானத்தின் அதிஷ்டான பகுதியை ஒட்டி ஒரு தொட்டி அமைக்கப்பட்டு, அதில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. அம்மனின் உக்கிரத்தை தணிப்பதற்காகவும், அம்பாளின் கருவறை குளிர்ச்சியாக இருப்பதற்காகவும் இந்த தொட்டி அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
கருவறையின் இடது புறம் உற்சவ அம்மனின் சன்னிதி உள்ளது. இத்திரு மேனிக்கு நாள்தோறும் சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த உற்சவ அம்மனுக்கு தினமும் 6 கால பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
காலை 7.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தம், வடக்குப் பிரகாரத்தில் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. இதனால் அம்மை நோய் கண்டவர்கள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவர்கள் நோயின் தாக்கத்தில் இருந்து விரைவில் நலம் பெறுவர் என்பது நம்பிக்கை.
கருவறையில் சமயபுரம் மாரியம்மன் மாறுபட்ட கோலத்தில் அருள்கிறார். மூலவரின் திருவுருவம் மரத்தால் செய்யப்பட்டது. ஆனால் அதன்மேல் சுதை வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது புதுமையான ஒன்று.
தங்க ஜடா மகுடம், நெற்றியில் வைரப்பட்டை, வைர கம்மல், மூக்குத்தி, கண்களில் கருணை நிறைந்த பார்வையும் கொண்டிருக்கும் மாரியம்மன், தன்னுடைய இடது கரங்களில் கபாலம், மணி, வில், பாசம், வலது கரத்தில் கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகியவற்றை தாங்கியுள்ளார்.
இடது காலை மடக்கி வைத்து, வலது காலை தொங்கவிட்ட நிலையில் சுகாசனத்தில் அமர்ந்து பக்தர்களின் குறைகளை நீக்கி அருள்கிறாள், இந்த மாரியம்மன்.
இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா, பூச்சொரிதல், சித்திரை பெருந்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி பெருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். தை மாதத்தில் 11 நாட்கள் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது.
பத்தாம் திருநாளில் திருவரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இருந்து மாரியம்மன் சீர் பெறுதல் வைபவம் நடைபெறும். மாசி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்குப் பூச்சொரிதல் நடைபெறுகிறது.
மகிஷாசுரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் அடங்கவும் தவம் செய்து, பச்சைப் பட்டினி விரதம் இருந்து சாந்த சொரூபியாக மாறிய மாரியம்மனுக்கான திருவிழா இது.
வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.
உலக மக்களின் நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது இருக்கவும், சகல சவுபாக்கியங்கள் கிடைக்கவும் இந்த பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறார், சமயபுரம் மாரியம்மன்.
சமயபுரத்தில் வழக்கமாக அம்பாளுக்கு தினம் தோறும் 6 கால பூஜையில், 6 விதமான தளிகையும் நைவேத்தியமாக வைக்கப்படும். சமைத்த உணவுப் பொருட்களை தான் 'தளிகை' என்று சொல்வார்கள்.
ஆனால் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களும், அம்பாளுக்கு சமைத்த உணவுகள் எதுவும் படைக்கப்படாது. இந்த 28 நாட்களிலும் இளநீர், பானகம், உப்பில்லாத நீர்மோர், துள்ளுமாவு, கரும்பு, பழ வகைகள் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.
இந்த ஆண்டுக்கான பச்சைப் பட்டினி விரதம் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இந்த விரதம் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி வரை உள்ளது. இந்த இடைப்பட்ட நாளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடை பெறும்.