திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோவில்களில் நாளை சூரசம்ஹாரம்
- தினமும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடக்கிறது.
- 31-ந்தேதி சட்டதேர்வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
அறுபடைவீடுகளில் முதற்படை வீ்டான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விரதம் இருக்கும் பக்தர்கள் சுப்பிரமணியரை வழிபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து 7.30 மணிக்குள் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை(30-ந்தேதி) நடக்கிறது. இதையொட்டி நாளை மாலை 6.30 மணியளவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு பக்தர்கள் புடைசூழ முருகப்பெருமான் சக்திவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்யக்கூடிய"சூரசம்ஹார லீலை "நடைபெறும். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 31-ந்தேதி காலை 7-15 மணியளவில் மலையை சுற்றி சட்டதேர்வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
சோலைமலை முருகன் கோவிலில் கடந்த 25-ந்தேதி யாக சாலை பூஜை, காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 31-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். இதே போல மற்ற முருகன் கோவில்களிலும் நாளை சூரசம்ஹார விழா நடக்கிறது.