தை கிருத்திகை முன்னிட்டு திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
- தைகிருத்திகையையொட்டி அதிகாலை மூலவருக்கு பால், விபூதி, பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உட்பட, பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
- திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்நிலையில் தை கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
தைகிருத்திகையையொட்டி இன்று அதிகாலை மூலவருக்கு பால், விபூதி, பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உட்பட, பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
இதை தொடர்ந்து தங்கவேல், தங்க கீரிடம் உட்பட, வைர ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.
மேலும் காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, மலர் காவடி, மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர்.