திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
- திருச்சானூர் கோவிலில் நாளை முதல் 10-ந்தேதி வரை பவித்ரோற்சவம் நடக்கிறது.
- புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) முதல் 10-ந் தேதி வரை நடைபெறும் பவித்ரோற்சவத்தை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நேற்று நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக அதிகாலை 7 மணி முதல் 9.30 மணிக்குள் தாயார் சுப்ரபாதத்தில் எழுந்தருளி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.
அதன்பின், நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிக் கட்டா போன்ற சுகந்தாவாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் கோவில் துணை நிர்வாக அதிகாரி லோகநாதம், பிரபாகர் ரெட்டி, கோவில் அர்ச்சகர் பாபுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐதராபாத்தை சேர்ந்த ஸ்வர்ணகுமார் ரெட்டி என்ற பக்தர் கோவிலுக்கு 17 திரைச்சீலைகளை வழங்கினார்.