வழிபாடு

புனிதநீர் கொண்டு வரப்பட்டபோது எடுத்தபடம்.

திருப்பதி கோவிலில் ஆத்யாயன உற்சவம் நிறைவு: 'தண்ணீர் அமுது' உற்சவமும் நடந்தது

Published On 2023-01-17 07:01 GMT   |   Update On 2023-01-17 07:01 GMT
  • ஆகாக கங்கை தீர்த்தத்தில் இருந்து ஒரு சிறிய வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுத்துவரப்பட்டது.
  • தீர்த்தத்தால் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 25 நாட்கள் ஆத்யாயன உற்சவம் நடந்து வந்தது. அதாவது, கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசியையொட்டி 11 நாட்கள் முன்பே ஆத்யாயன உற்சவம் தொடங்கியது. அதில் முதல் 11 நாட்கள் 'பகல் பத்து' என்றும், அடுத்த 10 நாட்கள் 'இரவு பத்து' என்றும் கூறுவர்.

அதைத்தொடர்ந்து 22-வது நாள் 'கண்ணுநுண் சிறுத்தாம்பு' பாசுரம் பாடப்பட்டது. 23-வது நாள் ராமானுஜர் நூற்றுந்தாதி பாடப்பட்டது. 24-வது நாள் வராகசாமி சாத்துமுறை உற்சவம் நடந்தது. 25-வது நாளான நேற்று முன்தினம் ஆத்யாயன உற்சவம் நிறைவையொட்டி தண்ணீர் அமுது உற்சவம் நடந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தண்ணீர் அமுது உற்சவம் நடப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ராமானுஜரின் தாய் மாமனான பெரிய திருமலைநம்பி. இவர், ஏழுமலையான் கோவிலுக்கு வந்து தங்கி பல்வேறு கைங்கர்யம் செய்து வந்தார்.

திருமலையில் உள்ள பாபவிநாசனம் தீர்த்தத்துக்கு தினமும் அதிகாலை நேரத்தில் சென்று மண்பானையில் தண்ணீர் எடுத்து வந்து, மூலவர் ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்து வந்தார். ஒருமுறை பாபவிநாசனத்துக்கு தண்ணீர் எடுத்து வர சென்றபோது, முதியவர் வேடத்தில் வந்த ஏழுமலையான் சிரமப்பட்டு இவ்வளவு தூரத்தில் உள்ள பாபவிநாசனம் தீர்த்தத்துக்கு தண்ணீர் எடுக்க செல்ல வேண்டாம், அருகில் உள்ள ஆகாச கங்கை தீர்த்தத்துக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய், எனக்கூறி விட்டு மாயமானார்.

அன்று முதல் பெரிய திருமலைநம்பி ஆகாச கங்கை தீர்த்தத்துக்கு தினமும் அதிகாலை நேரத்தில் சென்று தண்ணீர் எடுத்து வந்து மூலவர் ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்து வந்தார். அந்த நிகழ்வை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏழுமலையான் கோவிலில் ஆத்யாயன உற்சவத்தின் நிறைவு நாள் அன்று "தண்ணீர் அமுது" உற்சவம் நடக்கும்.

அதன்படி நேற்று முன்தினம் மாலை தண்ணீர் அமுது உற்சவம் நடந்தது. அதற்காக ஆகாக கங்கை தீர்த்தத்தில் இருந்து ஒரு சிறிய வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுத்துவரப்பட்டது. அந்தத் தீர்த்தத்தை உற்சவர் மலையப்பசாமிக்கு முன்னால் கோவிலின் நான்கு மாடவீதிகளில் மேள தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கோவிலுக்குள் எடுத்துச்சென்று அந்தத் தீர்த்தத்தால் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஊழியர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News