உலக கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது ஈகுவடார்
- முதல் பாதியில் செனகல் அணி ஒரு கோல் அடித்தது.
- ஆட்டநேர முடிவில் செனகல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தோகா:
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது.
இதில் ஈகுவடார், செனகல் அணிகள் மோதின.
தொடக்கம் முதல் செனகல் அணி சிறப்பாக ஆடியது . ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் செனகல் அணியின் இஸ்மைலா சர் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் செனகல் 1-0 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67-வது நிமிடத்தில் ஈகுவடார் அணியின் மொய்சஸ் கைசெடொ ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். இதற்கு பதிலடியாக செனகல் அணியின் கலிடோ கவுலிபலி 70-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், செனகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தியது. அத்துடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்தது.
இந்த தோல்வியின் மூலம் ஈகுவடார் அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.