உடற்பயிற்சி

உடல்நலம் சரியில்லாத காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?

Published On 2022-10-20 05:22 GMT   |   Update On 2022-10-20 05:22 GMT
  • உடற்பயிற்சி மிகவும் முக்கியமானதுதான்.
  • பலருக்கு உடற்பயிற்சி செய்வது என்பது வேப்பங்காய் போல் கசக்கும்.

பலருக்கு உடற்பயிற்சி செய்வது என்பது வேப்பங்காய் போல் கசக்கும். ஆனால், உடற்பயிற்சி செய்து பழகியவர்களுக்கு, ஒரு நாள் உடற்பயிற்சி செய்யவில்லை என்றாலும் அது மிகப்பெரிய கவலையாக இருக்கும். உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் கூட உடற்பயிற்சி செய்யத் தவற மாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள்.

படுத்த படுக்கையாக இருக்கும் சூழல் ஏற்பட்டால் தவிர்த்து மற்ற நேரங்களில் உடற்பயிற்சி செய்வேன் என்று அடம்பிடிப்பார்கள். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஓய்வாக இருப்பது கூட அவர்களுக்கு முடியாத காரியமாக இருக்கும்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட சூழலில் உடற்பயிற்சி செய்யலாமா என்பது பற்றிப் பார்ப்போம்.

உடல் நலம் பாதிக்கப்பட்டால், அதில் இருந்து சரி செய்ய நம்முடைய உடல் கடுமையாக பாடுபடும். கடுமையாக உழைக்கும். இந்த சூழலில் நாம் ஓய்வாக இருப்பதுதான் உடலுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி. அதனுடன் மருந்துகள் எடுத்துக்கொள்வது, நோய் பாதிப்பில் இருந்து உடல் வேகமாக குணமடைய உதவும்.

உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் உடற்பயிற்சி செய்வேன் என்று செய்தால், அது நோயில் இருந்து குணமாவதை நாமே தாமதம் செய்கிறோம் என்று அர்த்தம். அது மட்டுமல்ல, லேசான காய்ச்சல்தான் என்று கூறிவிட்டு ஜிம் போன்று வெளி இடங்களுக்குச் செல்வதன் மூலம் மற்றவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

எனவே, உடல் நலம் பாதிக்கப்பட்டால் சரியாகும் வரை ஓய்வாக இருப்பது நல்லது. அது லேசான பாதிப்பாக இருந்தாலும் சரி, ஓய்வாக இருந்து, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள உதவி செய்ய வேண்டும். நம்முடைய உடலுக்கு நாம் உண்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும். உடல் நலம் சரியான பிறகு எடுத்த எடுப்பில் கடுமையான பயிற்சிகள் செய்யக் கூடாது. லேசான பயிற்சிகளுடன் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக கடினமான பயிற்சி என்ற நிலைக்கு செல்ல வேண்டும்.

தேவை எனில் மருத்துவர், உடற்பயிற்சி ஆலோசகர் ஆலோசனை பெற்று செயல்படலாம். லேசான பாதிப்பாக இல்லாமல், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற தீவிர பாதிப்பாக இருந்தால், மருத்துவர் ஆலோசனை பெற்று அதன் அடிப்படையில் செயல்படுவது நல்லது. உடற்பயிற்சி மிகவும் முக்கியமானதுதான்.

Tags:    

Similar News