- பழமையான பயிற்சிகளுள் முக்கியமானது, பிரணாயாமம்.
- ஆழ்ந்த சுவாச முறை மன அழுத்தத்தை குறைக்கும். பதற்றத்தையும் தணிக்கும்.
நம்முடைய மூதாதையர்கள் கையாண்ட பழமையான பயிற்சிகளுள் முக்கியமானது, பிரணாயாமம். ஆழ்ந்து சுவாசித்து மூச்சை உள் இழுத்து வெளியிடும் இந்த பயிற்சியானது யோகாவின் ஒரு அங்கமாக விளங்குகிறது.
உடலையும், மனதையும் சமநிலைப்படுத்தக்கூடியது. இவை இரண்டின் நலனையும் மேம்படுத்தக்கூடியது. பிரணாயாமம் பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.
மன அழுத்தம் - பதற்றத்தை குறைக்கும்
பிரணாயாமம் பயிற்சி மூலம் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது மனதை அமைதிப்படுத்தும் திறனாகும். இந்த ஆழ்ந்த சுவாச முறை மன அழுத்தத்தை குறைக்கும். பதற்றத்தையும் தணிக்கும்.
செரிமான பிரச்சனையை போக்கும்
பிரணாயாமம் பயிற்சி மூலம் மேற்கொள்ளப்படும் ஆழ்ந்த சுவாசம் செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 'வேகஸ்' நரம்பை தூண்டும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளை போக்கவும் உதவும்.
ரத்த அழுத்தத்தை சீராக்கும்
பிரணாயாமம் பயிற்சியை வழக்கமாக தொடர்வது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி புரியும். இதயத்துடிப்பு சீராக நடைபெற ஊக்குவிக்கும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தையும் தடுக்கும்.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்
இந்த பயிற்சியானது சுவாச முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும், மன அழுத்த அளவைக் குறைப்பதன் காரணமாகவும் இதய நோய் ஏற்படும் அபாயம் வெகுவாக குறைந்துவிடும். ரத்த ஓட்டமும், இதயத் துடிப்பும் சீராக இருக்கும். கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்.
சோர்வை போக்கும்
பிரணாயாமம் செல்களுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க செய்யும். அதனால் உடல் ஆற்றலின் அளவும் அதிகரித்து சுறுசுறுப்புடன் செயல்பட தூண்டும்.
சோர்வை நெருங்கவிடாமலும் தடுக்கும். நாள் முழுவதும் அதிக விழிப்புடனும், உற்சாகத்துடனும் செயல்பட வைத்துவிடும்.
மன தெளிவை கொடுக்கும்
பிரணாயாமம் பயிற்சி செய்வதன் மூலம் கவனச்சிதறல்கள் கட்டுப்படும். கூர்ந்து கவனிக்கும் திறன் அதிகரிக்கும். மனமும் தெளிவு பெறும். மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் செறிவையும் அதிகரிக்கச் செய்யும். நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன், அறிவாற்றல் செயல்பாடு போன்றவையும் மேம்படும்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும்
பிரணாயாமம் பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் செய்திடும். மனதை அமைதிப்படுத்துவதன் மூலமும், எதிர்மறை உணர்ச்சிகளை குறைப்பதன் மூலமும் ஆழ் மன நலனை பேணுவதற்கு வித்திடும். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் ஆற்றலையும் கொடுக்கும்.
நுரையீரல் செயல் திறனை மேம்படுத்தும்
மூச்சை ஆழ்ந்து இழுத்து மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சி சுவாச செயல்முறைகளை ஊக்குவிக்கும். சுவாச மண்டத்தை பலப்படுத்தி நுரையீரலின் செயல் திறனை அதிகரிக்கவும் செய்யும். குறிப்பாக ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.
ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும்
இந்த பயிற்சி உடலில் உள்ள ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தவும் உதவிடும். குறிப்பாக தைராய்டு மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பி.சி.ஓ.எஸ். எனப்படும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த சுவாச பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.
நச்சுக்களை நீக்கும்
இந்த பயிற்சிக்காக நன்றாக மூச்சை உள் இழுத்து ஆழ்ந்து சுவாசிக்கும்போது வெளியேறும் கார்பன்டை ஆக்ஸைடு அளவு அதிகரிக்கும். அப்போது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறையும் நடக்கும். இந்த உள்ளுறுப்பு சுத்திகரிப்பு ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் பலம் சேர்க்கும். நோய் எதிர்ப்பு அமைப்பையும் வலுப்படுத்தும்.