மலை ஏறுவதனால் ஏற்படும் மகத்தான நன்மைகள் `7'
- இதயத்துக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமையும்.
- ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவும்.
இயற்கையை நேசிப்பவர்கள் நிச்சயம் மலையேற்றம் செய்வதற்கு ஆசைப்படுவார்கள். அடர்ந்த மரங்கள் சூழ்ந்த வனப்பகுதி வழியே நடந்தபடி, சுத்தமான காற்றை சுவாசித்தபடி, இயற்கை அழகை ரசித்தபடி மலை மீது ஏறும் அந்த பயணம் ஆனந்த அனுபவத்தை கொடுக்கும். கூடவே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏராளமான நன்மைகளை பெற்றுத்தரும். அவற்றுள் சில...
1. இதய ஆரோக்கியம்
'ஹைகிங்' எனப்படும் மலையேற்றம் செய்வது இதயத்துக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமையும். குறிப்பாக இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும், உடல் முழுவதும் ஆக்சிஜன் சென்றடைவதையும் மேம்படுத்தும். இதய நோய் அபாயத்தையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
2. தசை
மலையேற்றத்தின்போது பயணிக்கும் நிலப்பரப்பின் தன்மையை பொறுத்து தசைகளுக்கு கிடைக்கும் நன்மை மாறுபடும். மலையின் உச்சிப்பகுதியை நோக்கி ஏறும்போது தொடையின் தசை பகுதிகள், முழங்கால்களின் பின் பகுதி தசைகள், இடுப்பின் பின் பகுதி தசைகள் வலுவடையும். மலையில் இருந்து கீழ் நோக்கி இறங்கும்போது இடுப்பு, முழங்கால்கள், முதுகு பகுதிகள் ஒட்டுமொத்தமாக வலுப்பெறும்.
3. எடை மேலாண்மை
கலோரிகளை எரிக்கவும், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் மலையேற்றம் சிறந்த வழிமுறையாக அமையும். எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கையானது மலையேறும் பாதையில் எதிர்கொள்ளும் சிரமம் மற்றும் மலையேறுபவரின் உடல் எடையை பொறுத்து மாறுபடும்.
4. எலும்பு அடர்த்தி
மலையேற்றம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது எலும்புகளை பராமரிக்கவும் உதவும். உயரமான, தாழ்வான, மேடான, பள்ளமான என பல்வேறு நிலப்பரப்புகளில் நடப்பதால் ஏற்படும் அழுத்தமும், நெகிழ்வுத்தன்மையும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவிடும். எலும்பு வளர்ச்சியையும் தூண்டும். ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு அடர்த்தி பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.
5. மனநலம்
இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வை குறைக்கும். மலைப்பிரதேசங்களில் நடந்தபடி நேரத்தை செலவிடுவதும், அங்கு நிலவும் அமைதியான சூழலும் எண்டோர்பின் ஹார்மோன்களை வெளியிட தூண்டும். இந்த ஹார்மோன் ஒட்டுமொத்த மன நலனை மேம்படுத்த வழிவகுக்கும்.
6. சமநிலை
மலைப்பகுதி போன்ற சீரற்ற நிலப்பரப்புகளில் நடப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சமநிலையை பேண உதவிடும். திறன்களை மேம்படுத்துவதற்கும் உதவிடும்.
குறிப்பாக வயதானவர்களுக்கு அதிக பலனை கொடுக்கும்.
7. சுத்தமான காற்று
இயற்கையுடன் நேரத்தை செலவிடுவதும், உடல் ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். அதிலும் மலையேற்றம் செய்யும் வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
இது உடலில் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவும். புதிய, சுத்தமான காற்றை சுவாசிக்கவும், சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி கிடைப்பதற்கும் துணை புரியும். வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க இது அவசியம்.