உடற்பயிற்சி

தியானம் செய்யும்போது இசை கேட்கலாமா?

Published On 2024-09-08 02:42 GMT   |   Update On 2024-09-08 02:42 GMT
  • இசையை கேட்கும்போது உடலும், மனமும் தளர்வடையும், மன ஆரோக்கியமும் மேம்படும்.
  • தியானத்தில் மூழ்க தொடங்கும்போது சுற்றுப்புறப்பகுதியில் இருந்து எழும் ஓசையும், இரைச்சலும் தொந்தரவை தரும்.

மனநிலையை அமைதிப்படுத்தி ஆழ்மனதை சாந்தப்படுத்தும் அசாத்திய சக்தி கொண்டது தியானம். எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் அமைதி தவழும் இடத்தில் அமர்ந்து தியானம் செய்வது மனதை இதமாக்கும். அமைதியே தியானத்தின் பிரதானமாக இருக்கும்போது இசை கேட்டுக்கொண்டே தியானம் செய்யலாமா என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. மனதுக்கு பிடித்தமான இனிய இசையை கேட்டுக்கொண்டே தியானம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

தியானம் செய்யும்போது இசை கேட்பது தவறல்ல என்பதை ஆய்வுகளும் உறுதிபடுத்தி இருக்கின்றன. தியானத்தின்போது இசைக்கப்படும் அமைதியான இசை அதில் கவனம் செலுத்தவும், மனதுக்கு ஓய்வளிக்கவும் உதவும் என்று பலர் குறிப்பிடுகிறார்கள். அதேவேளையில் அமைதியான மற்றும் கவனத்தை சிதறடிக்காத இசையை தேர்ந்தெடுப்பது முக்கியம். இசை தியான பயிற்சிக்கு உதவுவதாக இருக்க வேண்டுமே தவிர அதை சீர்குலைப்பதற்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது.

மனதை வருடும் மெல்லிசையாக அது ஒலிக்க வேண்டும். அந்த இசையை கேட்கும்போது உடலும், மனமும் தளர்வடையும், மன ஆரோக்கியமும் மேம்படும்.

அதேவேளையில் ஆக்ரோஷமான வார்த்தை உச்சரிப்பை கொண்ட பாடல்கள், குத்துப் பாடல்கள், ஹிப்-ஹாப் பாடல்கள் போன்றவற்றை ஒலிக்க விட்டு தியானம் செய்வதால் எந்த பயனும் இல்லை. மனதை ஒருமுகப்படுத்தும், இனிமையான இசையை உள்வாங்கியபடி தியானிக்கும்போது மன அமைதிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். மென்மையான இசை இதமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும்.

இசை ஏன் கேட்க வேண்டும்?

* தியானம் செய்ய தொடங்கும்போது மனதை ஒருமுகப்படுத்துவதற்கு கூடுதல் நேரம் செலவிட வேண்டியிருக்கும். தியானத்தில் மூழ்க தொடங்கும்போது சுற்றுப்புறப்பகுதியில் இருந்து எழும் ஓசையும், இரைச்சலும் தொந்தரவை தரும்.

அந்த சமயத்தில் மென்மையான இசையை கேட்கும்போது கவனம் ஒரே புள்ளியில் குவிந்து மனம் ஒருநிலைப்படும். அத்துடன் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைப்பதற்கு இசை உதவிடும்.



* ஆரம்ப நிலையில் தியானம் மேற்கொள்ளும்போது எண்ணங்கள் திசை திரும்பக்கூடும், கவனச்சிதறலும் உண்டாகும். தியானத்தில் அதிக நேரம் ஆழ்ந்திருக்க மென்மையான இசை உதவி புரியும். தியானத்தின் மீது கவனத்தை அதிகரிக்கவும் செய்யும்.

* அறுவை சிகிச்சை போன்ற கடினமான சிகிச்சைகளுக்கு பிறகு இசையுடன் கூடிய தியானத்தில் ஈடுபடுவது உடலுக்கும், மனதுக்கும் நலம் சேர்க்கும். குறிப்பாக உடல் இயக்க செயல்பாட்டை மேம்படுத்தும். பதற்றமின்றி நிதானமுடன் செயல்பட வைக்கும்.

* தியானம் செய்யும்போது இசை கேட்பது உணர்ச்சிகளை சம நிலைப்படுத்தவும் உதவும். மனதளவில் பாதிப்புக்குள்ளாகியோ, நீண்ட நாட்களாக மன அழுத்தத்திற்கு உள்ளாகியோ இருந்தால் அதிலிருந்து விடுபட இசையுடன் கூடிய தியானம் உதவி செய்திடும்.

* பயணங்களின் போது இசையை கேட்க பலர் விரும்புவார்கள். அது மனதை அமைதியாகவும், பயணத்தை இனிமையாகவும் மாற்ற உதவும். அப்போது தியானத்துடன் கூடிய இசையை மேற்கொள்வது மனதை சாந்தப்படுத்தும்.

Tags:    

Similar News