null
குளிர் காலத்தில் மது உடலை சூடேற்றுகிறதா...? ஆராய்ச்சியாளர்களின் கருத்து
- மது ஒரு வெப்பமயமாதல் விளைவை கொண்டிருக்கிறது.
- குளிர்காலத்தில் மது அருந்துவது உங்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தலாம்.
மார்கழி மாதம் என்பதால் குளிர் வாட்டி வதைக்கிறது. மது பிரியர்கள் தினமும் இரவு நேரங்களில் ஒரு கையில் ரம் அல்லது விஸ்கி மற்றும் சிக்கன் வகைகளை ருசிக்கின்றனர்.
ஒரு பெக் ரம் உடலை சூடேற்றி குளிர்ச்சியை தடுக்கிறது என்பது குடிமகன்களின் நீண்டகால நம்பிக்கையாக உள்ளது. மதுவால் உண்மையில் உடலை வெப்பமாக்க முடியுமா? குடிப்பதற்கு காரணம் தேடி இது போன்ற கட்டுக்கதைகளை கூறப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த குளிர்கால கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் பதில் கூறியுள்ளனர்.
மது ஒரு வெப்பமயமாதல் விளைவை கொண்டிருக்கிறது. ஆனால் உடலில் முற்றிலும் மதுவால் சூடேற்ற முடியாது. மது குடிப்பதால் உங்கள் தோலுக்கு அருகில் உள்ள ரத்த நாளங்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் அதிக ரத்தம் பாய்கிறது.
மற்றும் தோலில் சூடான உணர்வை உருவாக்குகிறது. இந்த சூடான உணர்வு என்பது உடலை வெப்பப்படுத்தியது என்பதற்கான அர்த்தம் அல்ல. முக்கிய உறுப்புகளில் இருந்து ரத்தம் திசை திருப்பப்படுவதால் உடலில் மைய வெப்பநிலை குறையலாம்.
இதனை சரிபார்க்கா விட்டால் தாழ்வான வெப்ப நிலைக்கு சென்று விடும். கடுமையான குளிர்காலங்களில் இது ஆபத்து. மது குளிர்ந்த காற்றின் வெப்பநிலையை பற்றிய உணர்வை உடலில் குறைக்கிறது.
குளிர்காலத்தில் மது அருந்துவது உங்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தலாம். மதுபானம் உங்கள் முடிவெடுக்கும் திறனை குறைப்பதாக ஏற்கனவே அறியப்பட்டிருக்கிறது.
மது குடித்துவிட்டு குளிர்கால ஆடைகளை அணியா விட்டால் உடல் வெப்ப நிலையில் வியத்தகு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.